பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 2)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒள் நுதலீர் வந்து காணீரே
முத்துக்களையும் இரத்தினங்களையும் வைரத்தையும் தூய்மையான பொன்னையும் மாறிமாறிப் பதித்துச் சேர்த்தது போன்று, எங்கும் நீலரத்தினம் போன்ற வர்ணத்தையுடைய கண்ணனுடைய திருவடிகளிலுள்ள பத்து விரல்களில் நன்கு சேர்ந்திருக்கும் வர்ணங்கள் இருந்தபடியை காணுங்கள். ஒளி பொருந்திய நெற்றியுடைய பெண்களே! நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருவடிகளில் அகவாயிலழகை அநுபவித்தாராய் நின்றார் கீழ். இப்பாட்டில் திருவடிகளில் திருவுகிருடனே திருவிரல்களை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருவடிகளிலகவாயை அநுபவித்தாராய் நின்றார்கீழ்; இப்பாட்டில் திருவடிகளில் திருவுகிருடனே திரு விரல்களை அநுபவிக்கிறார்.
– திருவடிகளில் உள்ளங்காலினை அனுபவித்து நின்ற யசோதை, இப்பாட்டில் நகத்தினையும் விரல்களையும் அனுபவிக்கிறாள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (முத்தும்மணியுமித்யாதி) திருவடிகளுக்குச் செம்பஞ்சிட்டா ளாகையாலே திருவிரல்களுக்கும் மாறி மாறி ஒன்பது விரலுக்கும் நவரத்ந வர்ணத்தையும் மற்றை ஒரு விரலுக்கு ஸ்வர்ண வர்ணத்தையுமிட்டு அலங்கரித்து அவள் அநுபவித்த ப்ரகாரம் இவர் திருவுள்ளத்திலே ப்ரகாசித்து அநுபவிக்கிற இவர்க்கு தாத்காலிகமாய் தோற்றுகிறது. (முத்தித்யாதி) “முத்தும் மணியும் வயிரமும்” என்றது, நவரத்தத்துக்குமுபலக்ஷணம், ரத்தத்தளவிலன்றிக்கே தன் ப்ரேமத்தாலே முத்தை முற்பட இட்டு மாணிக்கத்தை இடுகையாலே “தத்திப் பதித்து” என்கிறது. “தத்தி” என்றது, தத்தவாய், மாறப் பதித்தென்றபடி. “வணங்கி” என்றது, வணங்கவென்றாப்போலே. “தலைப்பெய்தாப்போல்” என்கையாலே நீளமுடைத்தான பத்து நீல ரத்நத்தின் அக்ரத்திலே நவரத்ந வர்ணத்தையும் பொன்னின் வர்ணத்தையும் சேர்த்தாப்போலே இருந்ததென்கை. ஓராபரணத்திலே நவரத்நத்தையும் முத்தையும் அழுத்திச் சேர அதுபவிப்பாரைப் போலே அநுபவித்து, இவை உபமாநம் போராமையாலே “மணிவண்ணன் பாதங்கள் பத்து விரலும் ஒத்திட்டிருந்தவா காணீரே” என்கிறார். (ஒண்ணுதலீர் வந்து காணீரே) ஒளியையுடைத்தான நெற்றியையுடையவர்களென்றபடி. நுதல் - நெற்றி. “ஒண்ணுதல்” என்கையாலே ப்ரபத்தி ப்ரகாசகமான தாந்தியை யுடையவர்களென்றபடி. மாமுனிகள் வ்யாக்யானம் - (முத்துமித்யாதி) திருவடிகளுக்குச் செம்பஞ்சு சாத்துகிறபோது ஒன்பது விரலுக்கும் நவரத்ந வர்ணத்தையும், மற்றொரு விரலுக்கு ஸுவர்ண வர்ணத்தையும் பரபாகம் தோற்ற மாறி மாறிச் சாத்துகையாலே நீலரத்தம் போன்ற வடிவையுடையவனுடைய திருவடிகளில் பத்து விரலும், முத்து மாணிக்கம் வயிரம் முதலான நவரத்நங்களையும் நல்ல பொன்னையும் மாறி மாறிப் பதித்துச் சேர்த்தாப்போலேயாய், திருவிரல்களினுடைய லக்ஷணத்தில் ஒன்றுங் குறைவின்றிக்கே எங்கும் தன்னில் சேர்ந்திருந்தபடியைக் காணுங்கோள்; ஒள்ளிய நுதலையுடைய நீங்கள் வந்து காணுங்கோளென்கை. “முத்தும் மணியும் வயிரமும்” என்றவிது, அல்லாத ரத்நங்களுக்கும் உபலக்ஷணம். நுதல் - நெற்றி.
– (முத்தும் இத்யாதி) - திருவடிகளுக்குக் குங்குமப்பூக் குழம்பினைச் சாற்றும்போது, ஒன்பது விரலுக்கு நவரத்ன வர்ணத்தை உடைய சாந்தினையும், மற்றொரு விரலுக்குப் பொன் நிறம் தோற்றுவிக்கும் சாந்தினையும், ஒவ்வொரு வர்ணமும் ஒன்றொடு ஒன்று பொருந்தும் வகையில் மாறி மாறிச் சாற்றியதால், நீலரத்னம் போன்ற வடிவை உடையவனுடைய திருவடிகளில் உள்ள பத்து விரல்களும் எவ்வாறு இருந்தன என்றால் – முத்து, மாணிக்கம், வைரம் முதலான நவரத்னங்களையும், தூய்மையான பொன்னையும் மாறி மாறி நன்கு அழுத்திப் பதித்துச் சேர்த்தது போலவும், ஒவ்வொரு விரலும் ஸாமுத்திரிகா லக்ஷணத்தில் எவ்விதமான குறைபாடும் இல்லாதபடி நகங்களோடு கூடியதாகவும், விரல்களில் வர்ணங்கள் நன்கு சேர்ந்திருந்ததாகவும் இருந்தன. இப்படிப்பட்ட விரல்களை வந்து காணுங்கள். (ஒள் நுதலீர்) – ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண்களே! அதாவது திருவடிகளையே கதி என்று கொண்டு, மேலும் அதில் பூரித்து ஈடுபடுவதால், இயல்வாகவே புலன்கள் பின்னே செல்லாதவர்கள். (வந்து காணீரே) - வந்து காணுங்கள்.