திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 3)

ஆறாம்பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ

ஒவ்வொரு யுகங்களிலும் இந்தப் பூமியில் அவதரித்து நடந்தும், நின்றும், ஸமுத்ரத்தின் முன்பாக ஒரு ஸமுத்ரமே கிடப்பது போன்று திருக்கண்கள் வளர்ந்தருளியும், பெரியபிராட்டியாருடன் சேர்ந்து இனிதாக அமர்ந்தும் என்பதாக இப்படியே பல காலங்கள் அனைத்து உயிர்களையும் காப்பாற்றியபடி உள்ளவனே! நீ எடுத்துக் கொள்ளும் வடிவத்திற்கு ஏற்றாப்போலே உள்ள ரூபம் கொண்டு அவதரிக்கும் மஹாலக்ஷ்மியுடன் கூடியுள்ள உன்னை அண்டி அனுபவிக்காமல், இனி வரும் காலங்கள் முழுவதும், உன்னைக் குறித்த உறவுமுறை அறியாமல் இருந்து, இப்போது நன்கு அறிந்த நான், ருசி பிறக்காத காலங்களில் இழந்து போன்று, ருசி பிறந்த பின்னர் இழப்பேனோ?

ஜகதாகாரனான வடிவு காட்டினது எனக்குப் போராது; அஸாதாரண மான விக்ரஹத்தைக் கொடு வந்து காட்டவேணுமென்றார்; அது உமக்குக் காட்டுவது ஒரு தேச விசேஷத்தே கொடு போய்க் காணுமென்ன, அது தன்னை இங்கே கொண்டு வந்து இதர ஸஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார். அதொரு நாள் சற்றுப் போது காட்டாறு பெருகினாற் போலே செய்தோமென்ன, “அது காதாசித்கம் என்னவொண்ணாதபடி யுகந்தோறும் ராம க்ருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணி ரக்ஷிக்கை உனக்கு ஸ்வபாவமாயிருக்க, நான் நோவுபடக் கடவேனோ” என்கிறார்.

இந்த ஜகத்தையே சரீரமாகக் கொண்டுள்ள உனது வடிவத்தை எனக்குக் காண்பித்தது போதாது. உனக்கே உரியதான வடிவத்தைக் கொண்டு வந்து எனக்குக் காண்பிக்கவேண்டும் என்று பாசுரத்தில் கூறினார். அதற்கு ஸர்வேச்வரன், “அதனை நாம், உம்மை பரமபதத்திற்கு அழைத்துச் சென்று காண்பிப்போம்”, என்றான்; இதற்கு ஆழ்வார், “அதனை இங்கு மற்றவர்களுடன் கூடி நின்று அவதரித்துக் காண்பிக்கவேண்டும்”, என்று கடந்த பாசுரத்தில் கூறினார். இதற்கு ஸர்வேச்வரன், “அவற்றை நாம் அந்தந்த காலகட்டத்தில், காட்டாறு சட்டென்று வெள்ளம் வந்து பெருகுவது போன்று காண்பித்தோம்”, என்றான். இதற்கு இவர், “இவ்விதம் ஒரு காலத்தில் மட்டுமே நிகழும் என்று கூறுதல் கூடாது. ஒவ்வொரு யுகங்களிலும் இராமன் க்ருஷ்ணன் என்பது போன்ற அவதாரங்களை எடுத்து, அனைத்தையும் காப்பாற்றுதல் என்பது உனது இயல்பாக உள்ளபோது, நான் வருந்துவேனோ?”, என்கிறார்.

(ஞாலத்தூடே நடந்தும்) ஸதாதர்சநம் பண்ணுவார் முன்னே நடக்கக் கடவ நடையை, காதாசித்கமாக வந்தாலும் கடாக்ஷியாதார் முன்னே கிடீர் நடந்தது! அந்தர் முன்னே நடக்குமாபோலே. “அக்ரத: ப்ரயயௌ ராம:” என்றும், “அத தாசரதிர் வீரோ ராமோ நாம மஹாபல: | விஷ்ணுர் மாநுஷ ரூபேண சசார வஸுதாதலே” என்றும் சொல்லுகிறபடியே நடந்தும். வடதேசத்தினின்றும் போரப் பாடவல்லரா யிருப்பா ரொருத்தர் “பெருமாளைத் திருவடி தொழவேணும்” என்று வர, ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் ஒரு தீர்த்தத்தினன்று இராத் திருமாலையைப் பாடிச் சமைந்து, பெருமாளை யொரு மத்தகஜத்தைக் கைவசப்படுத்துமாபோலே ஏத்தி வசமாக்கிக் கணிசங் கொண்டு, “நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லானொருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது; இவனை யழைத்துக் கொண்டு ஸம்பாவநை பண்ணியருள வேணும்” என்ன; அவரைப் பெருமாள் அருளப் பாடிட்டு, திருப்புன்னைக் கீழினின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே யெழுந்தருளி, விண்ணப்பஞ் செய்வார்களை யருளப் பாடிட்டு, “வாரிகோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்ததாம்?” என்று திருவுள்ளமானார்; அப்படியேயிறே நம்மிழவுகளும் திருவுள்ளத்தே பட்டு, அவையெல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும்படியும். (நின்றும்) “அவஷ்டப்யச திஷ்ட்டந்தம் ததர்சதநுரூர்ஜிதம் | ராமம் ராமாநுஜம்சைவ பர்த்துச்சைவாநுஜம்சுபா” தன் பர்த்தாவைக் கொன்ற பெருமாளை “தப்பச் செய்தீரே” என்கையன்றிக்கே, “இவரது குற்றமுண்டோ? தம்மையாச்ரயித்தவர்கள் விரோதி போக்கத் தவிர்வர்களோ? இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர்க் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப்போலே தன் குற்றத்தாலே கெட்டானத்தனை கிடீரெ”ன்றாளிறே! இப்படி உகவாதாருடைய ஸ்த்ரீகளுக்கும் ஆகர்ஷகமாம்படியிறே கையும் வில்லுமாய் நிற்கும் நிலையிருப்பது! (கிடந்தும்) “பாஹும் புஜகபோகாபமுபதாயாரிஸூதந:” கடலை யநுவர்த்தித்துக் கிடக்கிற கிடைதானே லங்கை குடிவாங்க வேண்டும்படி யிருக்கை. “அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதியே மஹோததே:” ப்ரதிசிச்யே என்கிறதாயிற்று. கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று, அதுக்காக ஒரு கடல் ஒரு கடலோடே ஸ்பர்த்தித்துக் கிடந்தாற் போலே யிருக்கை; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்னும்படியிறே. (இருந்தும்) “உபவிஷ்டம் ஸ்வலங்க்ருதம்” என்றும், “உடஜே ராமமாஸீநம்” என்றும் சொல்லுகிறபடியே யிருக்கை. “திருவயோத்யையிலிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும்படியிறே தனியிடத்தில் ஓலக்கமிருந்தபடி. அவ்வோலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்டவொண்ணாதபடியிறே இவ்வோலக்கமிருந்தபடி; “அபித: பாவகோபமம்” நெருப்பு எரியாநின்றால் கிட்டப் போகாதாப்போலே அநபிபவநீயரா யிருந்தவிருப்பு. (சாலப் பலநாள்) உன்னுடைய ரக்ஷணம் அநாதியன்றோ? அன்றிக்கே, நூறாண்டு, பதினோராயிரமாண்டென்றுமாம். (உகந்தோறு) “ஸம்பவாமி யுகே யுகே” என்னுமா போலே. (உயிர்கள்) ஒரு திருவடி, திருவநந்தாழ்வான், பிராட்டிக்காக அன்று கிடீர், ஸர்வாத்ம ஸம்ரக்ஷணமன்றோ உன்னது! (காப்பானே) இவர்களுக்கு அழித்துக் கொள்ளுகை பணியானாற்போலே யிறேயவனுக்கும் நோக்குகை பணியானபடி. நான் கைவாங்கினேன், இனிக் காவற் சோர்வுபடாமல் வேணுமாகில் நோக்கிக்கொள். “ராம லக்ஷ்மண குப்தாஸா ஸுக்ரீவேண ச வாஹிநீ” கடற்கரையிலே விட்டபோது பெருமாளை நோக்குகைக்கு, தம்பியார், மஹாராஜர், மைந்த த்விவிதர்கள் உள்ளிட்ட முதலிகளெல்லோரும், லங்கையிலே கிட்ட, ஆகாசமெல்லாம் வெளிக்காவலடைத்து, நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்தவளவிலே, பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் இறே. அவன் நோக்குகைச்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனையிறே வேண்டுவது. நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது ப்ரமமிறே; உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனேயிறே. (கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே) தாயும் தமப்பனுங்கூடவிருக்கக் கிட்டப் பெறாதே ஸ்தநந்தய ப்ரஜை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாபோலே யிருக்கிறது காணும்! “அநந்யா” என்கிறபடியே அவனும் அவளுமான சேர்த்தியிறே இவர்க்கு ப்ராப்யம். (இன்னம் தளர்வேனோ – சாலப் பலநாள்) முன்பு அநாதி காலமிழந்த நான் இன்னம் அநந்த காலமிழக்கவோ? (அடியேன்) அது கிடக்க, “உன்னாலே யிழந்தாய்” என்று சொல்லிக் கைவிடலாமென்றிருக்கிறாயோ? (இன்னம் தளர்வேனோ) “ஒரு மிதுநம் எனக்கு ப்ராப்யம்” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ? “நீ ரக்ஷகன்” என்றறியாதொழிதல், “வேறு எனக்கு ரக்ஷகமுண்டு” என்றிருத்தல், “நான் எனக்கு ரக்ஷகன்” என்றிருத்தல், “லக்ஷ்மீ ஸநாதமான வஸ்து ப்ராப்யம்” என்றறியாதொழிதல், “எனக்கு நான் உரியேன்” என்றிருத்தல் செய்தேனோ இழக்கைக்கு? ருசி பிறந்த பின்பு இழக்கவோ? இப்பாட்டால் அகாரார்த்தத்தை ஸக்ரமமாக வ்யாக்யாநம் பண்ணுகிறார். “அவரக்ஷணே” இறே தாது. ரக்ஷிக்குமிடத்தில், ஸர்வப்ரகாரமாக ரக்ஷிக்கவேணும்; அதுதான் ஸர்வகாலமும் ரக்ஷிக்கவேணும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் ஸர்வரக்ஷகனாக வேணும்; இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “ந கச்சிந்நாபராத்யதி” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனுங் கூடவாயிற்று; ஆகையாலே, அகாரம் மிதுநத்துக்கு வாசகமாயிற்று. “ஞாலத்தூடே” இத்யாதியாலே ஸர்வப்ரகார ரக்ஷகத்வஞ் சொல்லிற்று; “சாலப் பலநாள்” இத்யாதியாலே ஸர்வகால ரக்ஷகத்வஞ் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே ஸர்வரக்ஷகத்வஞ் சொல்லிற்று; “கோலத் திருமாமகளோடுன்னைக் கூட” என்கையாலே ஸ்ரீய:பதியே ப்ராப்யம் என்றது. அகார விவரணமான திருமந்த்ரார்த்தமுஞ் சொல்லுகிறது; “கோலத்திருமாமகளோடுன்னை” என்கையாலே, ப்ரஹ்ம ஸ்வரூபஞ் சொல்லிற்று; “அடியேன்” என்கையாலே, ப்ரத்யகாத்ம ஸ்வரூபஞ் சொல்லிற்று; “உயிர்கள் காப்பான்” என்கையாலே, உபாயஞ் சொல்லிற்று; “உன்னைக் கூட” என்கையாலே, பலஞ் சொல்லிற்று; “உன்னைக் கூடாதே – தளர்வேனோ” என்கையாலே, விரோதி சொல்லிற்று.

– எப்போதும் உன்னைக் காணவேண்டும் என்றுள்ளவர்கள் முன்பாக நடக்க வேண்டிய நடையை, அவ்விதம் நீ நடந்தாலும், பாராமல் உள்ளவர்கள் முன்பாக அல்லவோ நடந்தாய்! இவ்விதம் நடந்தமைக்குப் ப்ரமாணம் காண்பிக்கிறார். ஆரண்ய காண்டம் (11-1) – அக்ரத: ப்ரயயௌ ராம: - இராமன் முன்னே நடந்தான் – என்றும், மஹாபாரதம் ஆரண்யபர்வம் - அத தாசரதிர் வீரோ ராமோ நாம மஹாபல: | விஷ்ணுர் மாநுஷ ரூபேண சசார வஸுதாதலே - பீமனிடம் அனுமன், “மஹாவிஷ்ணு மனிதப்பிறவி எடுத்து இந்தப் பூமியில் நடந்தார்” - என்றும் கூறுவதற்கு ஏற்ப நடந்தும். ஆகவே அவன் அடியார்களுக்காகச் செய்யும் செயல்களில் ஒரு நிகழ்வைக் கூறுகிறார். நன்கு பாடத் தெரிந்த ஒருவர் வடக்கிலிருந்து “பெரியபெருமாளுடைய திருவடிகளைத் தரிசிக்கவேண்டும்” என்று எண்ணியபடியே வந்தார். அப்போது ஆழ்வார் திருவரங்கபெருமாள் அரையர், தீர்த்தவாரி நிகழ்ந்த அந்த நாளில், திருமாலை ப்ரபந்தத்தைப் பாடி முடித்துவிட்டு, பெருமாளை மத்தகஜம் புகழ்வது போன்று புகழ்ந்து, தன் வசமாக்கிவிடுவோம் என்று சபதம் பூண்டவராக அரங்கனிடம், “அடியேன்! உனது திருவடிகளுக்கு ஏற்ற ஒருவர், எழுநூறு காத தூரம் உள்ள வழியைக் கடந்து, உன்னுடைய திருவடிகளைத் தொழவேண்டும் என்று வருகிறார். அவரை அழைத்து மரியாதை செய்யும்படியாகச் செய்யவேண்டும்”, என்றார். உடனே அரங்கனும், “அப்படியே செய்கிறோம்”, என்று திருவுள்ளமாக உரைத்தான். சந்திரபுஷ்கரிணியில் உள்ள திருப்புன்னை மரத்தின் கீழிருந்து புறப்பட்டு, நாலு கோல்கள் அளவு முடிய, தோளுக்கினியானில் ஏறாமல், பட்டர்களுடைய திருக்கைத்தலமாகவே, அந்தப் பாடகர் நின்ற இடத்திற்குச் செல்லத் தயாராக புறப்பட்டார். அப்போது விண்ணப்பம் செய்பவர்களை அழைத்து, “வாருங்கள். இவன் கடந்து வந்த தூரத்திற்கு நாம் செய்த இந்தச் செயல் போதுமானதா?”, என்றான். இப்படி அல்லவோ நாம் இழந்த இழப்புகளும், நாம் அடைந்த துன்பம் அனைத்தும் நீங்குவதற்கு ஈடாகத் தனது திருமுகத்தைக் காண்பிக்கத் திருவுள்ளம் கொள்ளுதல் உள்ளது. – (நின்றும்) - அடுத்து அவன் நிற்கும் நிலை இன்னது என்றும், அதுவும் கவரும்படியாக இருக்கும் என்றும் அருளிச்செய்கிறார். கிஷ்கிந்தா காண்டம் (19- 25) – அவஷ்டப்யச திஷ்ட்டந்தம் ததர்சதநுரூர்ஜிதம் | ராமம் ராமாநுஜம்சைவ பர்த்துச்சைவாநுஜம்சுபா - கம்பீரமாக வில்லை ஏந்தியபடி நிற்கும் இராமனையும், லக்ஷ்மணனையும், தனது கணவனுடைய இளையவனாகிய ஸுக்ரீவனையும் நல்லவளாகிய தாரை பார்த்தாள் - என்பது காண்க. தனது கணவனைக் கொன்ற இராமனை நோக்கி, “நீவிர் தவறு இழைத்து விட்டீர்” என்று கூறவில்லை; மாறாக, “இராமனிடம் குற்றம் உள்ளதோ? தன்னைச் சரணம் புகுந்தவர்களுடைய விரோதிகளை அழிப்பதற்குத் தவிர்ப்பவர்கள் உள்ளனரா? ஸுக்ரீவனும் இராமனுக்கு ஏற்றபடி இருந்தால் ரக்ஷிக்கமாட்டானோ? தண்ணீர் பருகுவதற்காகச் சென்ற ஏரியில், தலை கீழாக விழுந்து இறப்பவர்கள் போன்று தனது குற்றத்தால் வாலி அழிந்தான்”, என்று அல்லவோ கூறினாள்? இதனையே ச்லோகத்தில் உள்ள “சுபா - நல்லவள்” என்பது காண்பிக்கிறது. ஆகவே அவனை அண்டாதவர்களுடைய மனைவிமார்களையும் கவர்ந்து இழுக்கும் விதமாக அல்லவோ திருக்கரமும் வில்லுமாக நிற்கும் நிலை உள்ளது! – (கிடந்தும்) - யுத்தகாண்டம் (21-1) – பாஹும் புஜகபோகாபமுபதாயாரிஸூதந: – ஸர்ப்பத்தின் உடல் போன்ற நீண்ட திருக்கரத்தைத் தலைக்கு அணையாகக் கொண்டு ஸமுத்ரத்தை நோக்கி கிழக்கு முகமாக கைகளைக் குவித்தபடி இராமன் கிடதான் - என்பது காண்க. ச்லோகத்தில் உள்ள “அரிஸூதா:” என்பதை “கடலை” என்று தொடங்கியும், “மஹோததே” என்பதை “போர அளவு உடைத்தாக” என்பது தொடங்கியும் அருளிச்செய்கிறார். கடலை வேண்டியபடி கிடக்கும் நிலையானது, இலங்கை குடிவாங்க வேண்டும்படியாக இருந்தது. அந்த ஸமுத்திரம் தன்னளவு முழுவதும் உள்ளதாக எண்ணி, ஒரு ஸமுத்ரமானது ஒரு ஸமுத்ரத்துடன் பொறாமை கொள்ளும்படியாகக் கிடந்தது எனலாம். கம்பராமாயணத்தில் - கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி - என்பது காண்க. – (இருந்தும்) – அயோத்யாகாண்டம் (16-8) - உபவிஷ்டம் ஸ்வலங்க்ருதம் – அலங்காரம் செய்து அமர்ந்திருந்தவனை – என்றும், அயோத்யாகாண்டம் (99-25) - உடஜே ராமமாஸீநம் - சடையுடன் கூடியபடி அமர்ந்திருந்த – என்றும் கூறுவதற்கு ஏற்ப வீற்றிருத்தல். திருஅயோத்தியில் உள்ள அரச சபையில் கூட்டம் சிறியது என்று கூறலாம்படி அல்லவோ இவன் தனிமையில் இருந்தவிடத்தில் நிலைமை உள்ளது! அந்த அவையில் இளையவனும் அண்டலாம்படி இருந்த நிலை இங்கு இல்லாமல் உள்ளது! அயோத்யாகாண்டம் (99-25) - அபித: பாவகோபமம் – சுற்றிலும் அக்னி சூழ்ந்தது போன்று உள்ளவனை - என்பதற்கு ஏற்ப, அக்னியானது எரியும்போது, அருகில் செல்ல இயலாதது போன்று, அண்டுவதற்கு அரியவனாக இருந்த நிலை. – (சாலப் பலநாள்) - ஒவ்வொரு கல்பத்திலும் அவதாரம் செய்தருள்வதைக் கருத்தில் கொண்டு “உன்னுடைய காக்கும் தன்மையானது தொடக்கம் அறியாதபடி தொடர்வது அல்லவோ?”, என்கிறார். அல்லது, இராமனாகவும் க்ருஷ்ணனாகவும் பல காலம் எழுந்தருளியிருந்ததை எண்ணி, “நூற்றாண்டும், பதினோராயிரம் ஆண்டும்” என்று கூறுவதாகவும் கொள்ளலாம். (உகந்தோறு) - கீதை (4-8) – ஸம்பவாமி யுகே யுகே - ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் - என்று கூறுவது போன்று உரைக்கிறார். (உயிர்கள்) - “உயிர்கள்” என்று பன்மையில் கூறுவது ஏன்? ஒரு திருவடி, ஆதிசேஷன், பெரியபிராட்டி என்பவர்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் நிலை அல்லவோ உன்னுடையதாக உள்ளது? (காப்பானே) - இவர்களுக்கு அழித்துக் கொள்ளுகை என்பது பணியாக உள்ளது போன்று, உனக்கு நோக்குதல் என்பது பணியாக உள்ளது. என்னை நானே காப்பாற்றிக் கொள்வதிலிருந்து கைவிட்டுக் கொண்டேன்; இனி “எனது காப்பாற்றுதல்” என்பதில் எந்தத் தடையும் இன்றி, உனது காவலில் தவறு ஏற்படாலம், நீ வேண்டுமானால் என்னை நோக்கிக் கொள்வாயாக. ஒருவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதை, நிறுத்திக் கொண்டால் அவன் காப்பானோ என்பதற்கு உதாரணம் காண்பிக்கிறார்; யுத்தகாண்டம் (25-32) – ராம லக்ஷ்மண குப்தாஸா ஸுக்ரீவேண ச வாஹிநீ - ஸுக்ரீவனோடு சேர்ந்த இந்தப் படையானது இராமனாலும் லக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது - என்பது காண்க. இந்த ச்லோகத்தை அடுத்து வ்யாக்யானம் செய்கிறார். – யுத்தகாண்டம் (25-32) - ராம லக்ஷ்மண குப்தாஸா ஸுக்ரீவோ வாஜிநீ பபூவ துர்தர்ஷதரா ஸேந்த்ரைரவி ஸுராஸுரை: - இராமனாலும் லக்ஷ்மணனாலும் ஸுக்ரீவனாலும் பாதுகாக்கப்படும் அந்த வானரப்படையை, அனைத்து தேவர்களும் அஸுரர்களும் ஒன்றாகக் கூடி சேர்ந்து வந்தாலும் கூட சிறிதும் அடக்க இயலாது - என்பது காண்க. இராமன் கடற்கரையில் கிடந்தபோது, இராமனைப் பாதுகாக்கும் விதமாக லக்ஷ்மணன், ஸுக்ரீவன், மைந்தன், த்விவிதன் போன்ற பலரும், இலங்கை உள்ள திசையை நோக்கியபடி, அங்கிருந்து யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி நின்றனர். ஆகாசம் முழுவதையும் வெளிக்காவல் காத்தபடி இருந்தார்கள். ஒரு புதையலைப் பாதுகாப்பவர்கள் போன்று இராமனைப் பாதுகாத்து நின்றனர். இவர்கள் இத்தனை பேரும் தங்கள் கண்கள் சோர்ந்து உறங்கியபோது, இராமன் தனது திருக்கரத்தில் வில்லும் அம்புமாக நின்று, இவர்களுக்கு வெளிப்புறத்தைக் காவல் காத்தபடி உலவினான். நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலிருந்து நமது சொந்த முயற்சியைக் கைவிடுதல் என்பது மட்டுமே, அவன் நம்மைக் காப்பதற்கு அடியாகிறது என்பதை, “இவர்கள் அனைவரும் தங்கள் கண்களை மூடுவதே அவன் காப்பாற்றுவதற்கு ஏற்றது” என்றார். நாம் அவனைப் பாதுகாக்கிறோம் என்ற எண்ணமானது, நமது மயக்கம் காரணமாக ஏற்படுவதாகும். ஆனால் அவனுடைய ஸேனையின் மன்னனாகிய ஸுக்ரீவனை, “தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்பவன்” என்ற பிரிவில் சேர்க்கலாமோ என்றால், இந்த மயக்கம் காரணமாக அவன் அவ்விதம் எண்ணுகிறான். மயக்கம் தெளிந்து நோக்கினால், “நம்மைக் காப்பவன் அவனே” என்று உரைக்கலாம். – (கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே) - தாயும் தந்தையும் உள்ளபோதிலும், அவர்களை அண்ட இயலாமல் தாய்ப்பால் பருகும் ஒரு குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிப்பது போன்று இவள் நிலை உள்ளது. “உன்னைக் கூடாதே” என்று மட்டுமே கூறாமல் “கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே” என்று ஏன் கூறினார் என்றால், “அநந்யா - அவனை விட்டு வேறு என்றாகாதவள்” என்பதற்கு ஏற்ப, அவனும் அவளுமாக உள்ள சேர்த்தி அல்லவோ இவருக்குப் பேறாக உள்ளது! (இன்னம் தளர்வேனோ – சாலப் பலநாள்) - இதுவரை எல்லையற்ற காலம் உன்னை இழந்துள்ள நான், இனியும் எண்ணற்ற காலம் இழப்பேனோ? (அடியேன்) – “உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள முனைந்ததால் என்னை இழந்தாய்” என்று என்னிடம் கூறி, என்னைக் கைவிடலாம் என்று உள்ளாயோ? (இன்னம் தளர்வேனோ) – “ஒரு ஜோடி எனக்குப் பேறு” என்று அறிந்த பின்னரும் நான் தளர்வேனோ! நீயே எனக்கு ரக்ஷகன் என்பதை நான் அறியாமல் இருத்தல், எனக்கு வேறு ரக்ஷகன் உண்டு என்று எண்ணியபடி இருத்தல், மஹாலக்ஷ்மியின் நாதனே எனக்குப் பேறு என்று அறியாமல் இருத்தல், எனக்கே நான் உரியவன் என்று எண்ணுதல்” என்பதாக நான் இருந்தேனோ? இவ்விதம் இருந்தால் அல்லவோ நான் உன்னை இழப்பேன்? உன்னைக் குறித்த ருசி ஏற்பட்ட பின்னரும் நான் உன்னை இழப்பேனோ? – இந்தப் பாசுரமானது ப்ரணவத்தில் உள்ள “அ” என்பதன் பொருள் என்று அருளிச்செய்கிறார். ஆகவே, அகாரத்தின் பொருள் முறைப்படி வ்யாக்யானம் செய்கிறார். “அவனே ரக்ஷகனே” என்பதே மூலம் அல்லது தாதுவாக உள்ளது. அதாவது ரக்ஷிக்கும் ஒருவன், ரக்ஷிக்கும்போது அனைத்துவிதங்களிலும் ரக்ஷிக்கவேண்டும், அனைத்து காலங்களிலும் ரக்ஷிக்கவேண்டும், இவ்விதம் காக்கும்போது அனைவரையும் காக்கவேண்டும். இவ்விதம் எந்தவிதமான தடையும் இன்றி ரக்ஷிக்கும்போது யுத்தகாண்டத்தில் - ந கச்சிந்நாபராத்யதி - தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை - என்று கூறும் அவளும், பெரியாழ்வார் திருமொழியில் - என்னடியார் அது செய்யார் - என்று கூறும் அவனும் சேர்ந்து உள்ளதாகிறது. எனவே அகாரம் என்பது அந்த இருவரையும் குறிப்பதாகிறது. அடுத்து “ஞாலத்தூடே ... காப்பானே” என்பதன் மூலம் அனைத்து விதங்களிலும் காப்பாற்றுதல் கூறப்பட்டது. “சாலப் பலநாள் யுகம்தோறும்” என்பதன் மூலம் அனைத்து காலங்களிலும் காப்பாற்றுதல் கூறப்பட்டது. அடுத்து “உயிர்கள்” என்கையால் அனைத்தையும் காப்பாற்றுதல் என்பது கூறப்பட்டது. “கோலத்திருமகளோடு உன்னைக் கூட” என்பதன் மூலம், மஹாலக்ஷ்மியின் நாதனே பேறு என்று கூறப்பட்டது. – அடுத்து அகாரத்தின் விளக்கமான திருமந்த்ரத்தின் பொருளும் கூறப்படுகிறது. “கோலத்திருகளோடு உன்னை” என்பதால் ப்ரஹ்ம ஸ்வரூபம் கூறப்பட்டது. “அடியேன்” என்பதால் ஜீவ ஸ்வரூபம் கூறப்பட்டது. “உயிர்கள் காப்பான்” என்பதால் உபாயம் கூறப்பட்டது. “உன்னைக் கூட” என்பதால் பலன் கூறப்பட்டது “உன்னைக் கூடாதே தளர்வேனோ” என்பதால் விரோதி ஸ்வரூபம் கூறப்பட்டது.