திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 2)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே
இந்தப் பூமியும் விண்ணும் உகக்கும்படியாக, பெரிய வடிவத்தைச் சிறியதாக்கி வாமநனாக, யாசித்த உடனேயே தனது திருக்கரத்தில் நீர் விழுந்தவுடன் ஓங்கி வளர்ந்து, அனைத்து சக்திகளுடைய சேர்க்கையும் வெளிப்படும்படியாக, பூமியையும் விண்ணையும் அளந்து கொண்டு வியக்க வைக்கும் லீலைகள் பொருந்திய ஸ்வாமியானவனே! மற்ற பலன்களை எதிர்ப்பார்ப்பவர்களும் கூட வெளிப்பட்ட வடிவழகு கொண்ட உன்னைக் கண்டால் அல்லாமல் தரிக்கமாட்டாத ஆசை கொண்ட நான், அந்த வடிவழகோடு நீ வந்து, மனதால் காண்பது அல்லாமல் நேரடியாகவே கண்களால் கண்டு மகிழும்படியாக, அதன் விளைவாக நான் கூத்தாடும்படியாக, மஹாபலியின் யாக பூமியில் வந்தது போன்று, எனக்காக இந்தப் பூமியில் ஒருநாள் நடந்து வரவேண்டும்.
– “வாராய் என்று நிர்ப்பந்தித்தல்ல காணும், நம்மைக் காண்பது! உம்மை ஒரு தேச விசேஷத்திலே யழைத்துக் காணும் காட்டுவது” என்ன; அவ்வடிவு தன்னையே இங்கே கொடு வந்து இதர ஸஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ வென்கிறார்.
– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவிர் நம்மை ‘இங்கு வருவாயாக’ என்று நிர்ப்பந்தம் செய்து காண முயலவேண்டாம். உம்மை நான் பரமபதத்திற்கு அழைத்து எம்மைக் காண்பிப்போம்”, என்றான். இதற்கு ஆழ்வார், “அந்த வடிவழகுடன் இங்கு வந்து, மற்ற சேதநர்கள் போன்று காண்பிக்கமாட்டாயா?”, என்றார்.
(மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய்) இவ்வளவில் ஸ்ரீவாமநனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபயவிபூதியும் அழியுமாகாதே ஒரு பாட்டம் மழை விழுந்தால் பதார்த்தங்களடையச் செவ்வி பெறுமாபோலே உகவாதாரும் மகிழும்படியன்றோ வந்து தோற்றிற்று. (வலங்காட்டி) ஔதார்யமென்றொரு குணலேசங் கிடக்கையாலே ராவணாதிகளைப்போலே அம்பாலே யழிக்கப் போகாதே; அழகாகிற பலத்தைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி. சுக்ராதிகளுடைய நிரோதமுண்டாயிருக்கச் செய்தேயிறே யழகுக்குத் தோற்றுக் கொடுத்துக் கொண்டு நின்றபடி. (குறளாய்) கோடியைக் காணியாக்கினாற்போலே முகந்து கொள்ளலா யிருக்கை. (மண்ணும் விண்ணுங் கொண்ட) பூம்யந்தரிக்ஷாதிகளைக் காற்கீழே யிட்டுக் கொண்ட. இந்த்ரனுக்குக் “கொடுத்த”வென்னாதே, “கொண்ட” என்கிறது. அவன் ஆஸுர ப்ரக்ருதியாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்டபடியும், ஆச்ரிதனான இந்த்ரனுடைய அவிபாக ரஸத்தாலும். (மாயவம்மானே) ஸ்ரீய:பதியானவன் அர்த்தியானபடியும், வடிவழகைக் காட்டி. வாய்மாளப் பண்ணினபடியும், “கொள்வனான் மாவலி” என்றாற்போலே சில முக்தஜல்பிதங்களைப் பண்ணினபடியும், சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே யளந்தபடியுந் தொடக்கமான ஆச்சர்யங்களைச் சொல்லுகிறது. (அம்மானே) “தேவாநாம் தாநவாகாஞ்ச ஸாமாந்யமதிதைவதம்” என்கிற பொதுவான ஸ்வாமித்வமிறே அங்ஙன் செய்ய வேண்டிற்று? (நண்ணியுனை நான் கண்டுகந்து கூத்தாட) இந்த்ராதிகளைப் போலே யெனக்கு ராஜ்யாபேக்ஷையில்லை காண்! நீ பண்ணித் தந்த வெளிச்சிறப்பாலே த்ருப்தனாகிறிலேன். நானுன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வரவேணும். வருகைக்குண்டான வியாபாரம் அவன் தலையது; வந்தால் உகக்கையிலே இவர்க்கந்வயம். (நான் கண்டுகந்து கூத்தாட) மஹாபலியைப்போலே ஒன்று கொடுக்க இருக்கிறேனல்லேன்; இந்த்ரனைப் போலே ஒன்று கொள்ள இருக்கிறேனல்லேன்; “எனக்கு” என்று இருப்பாரோடும், “என்னது” என்றிருப்பாரோடுமோ நீ கொடுத்துக் கொண்டு பரிமாறுவது? உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ? “ஸம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதந்ந: பரமம் தநம்” என்கிற இதிலேயிறே இவர்க்கு அந்வயம். (நண்ணி) - நானிருந்தவிடத்தே நீ வந்து கிட்டி. (ஒருநாள்) பின்பொரு நாள் அச்செயல் செய்யலாகாதோ? மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ? அநந்ய ப்ரயோஜநர் முன்பு நடக்கலாகாதோ? (ஞாலத்தூடே நடவாய்) நடையழகில் வாசி கண்டு அதிலே ஈடுபடாதே, ஒளதார்யங் கொண்டாடி யிருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது? நடையழகில் உள்மானம் புறமானங் கண்டு அதுவே ஜீவநமா யிருக்கிற என் முன்னே நடக்கலாகாதோ?
(மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய்) - மஹாபலிக்காக ஒரு வாமனனாய் இங்கு வந்து தோன்றவில்லை என்று வைத்துக் கொண்டாலும், இரண்டு விபூதிகளும் அறியாதபடி, ஒரு பாட்டம் மழை மூலம் அனைத்துப் பொருள்களும் வளம் பெறுவது போன்று, உன்னைக் கண்டு மகிழ்ந்தவர்கள் கூட மகிழ்ச்சி கொள்ளும்படியாக அல்லவோ நீ வந்து தோன்றினாய். (வலம் காட்டி) - ஏன் அழகைக் காண்பிக்கவேண்டும், மஹாபலியை ஹிம்ஸித்து அனைத்தையும் மீட்டிருக்கலாம் அல்லவோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். தாராள குணம் என்பதாக ஒரு தன்மை உள்ளதால், இராவணன் போன்று அம்பு கொண்டு அழிக்க முயலாமல், தனது அழகு என்னும் பலத்தைக் காண்பித்து, மஹாபலியின் வாய் பிளக்கும்படிச் செய்தான். “வாய் மாளப் பண்ணி” என்று ஏன் கூறவேண்டும்; இவன் செய்தது “கபடம்” என்று அறியாத காரணத்தால் மஹாபலி அளித்தான் என்று கூறலாம் அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார்; அங்கு சுக்ராசார்யார் போன்றவர்களுடைய மதியூகம் இருந்தபோதிலும் அல்லவோ இவனுடைய அழகிற்குத் தோற்று மஹாபலி அனைத்தையும் அளித்தான்; ஆகவே இவ்விதம் கூறினார். (குறளாய்) - “குறளாய்” என்று வாமனத்தன்மை கூறப்பட்டபோது, “அழகைக் காட்டினான்” என்று ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார்; கோடியை, சிறிய அளவான காணி என்று ஆக்கியது போன்று, தனது அழகை எளிதில் அனுபவிக்கலாம்படி நின்ற நிலை. (மண்ணும் விண்ணுங் கொண்ட) - பூமி மற்றும் ஆகாயம் ஆகிய அனைத்தையும் தன் முன்பாக ஒரு சிறிய வஸ்து என்றாக்கிய நிலை. மண்ணையும் விண்ணையும் மஹாபலியிடன் வாங்கிக் கொண்ட உடனேயே இந்த்ரனிடம் அளித்தாலும், இங்கு “இந்த்ரனுக்குக் கொடுத்த” என்று கூறாமல் “கொண்ட” என்று ஏன் கூறினார்? மஹாபலியானவன் அஸுர பிறவி என்பதால், அவனிடமிருந்து தானே பெற்றுக் கொண்டான்; இந்த்ரன் தனது அடியவன் என்பதால், தானே அளித்தான். – (மாய அம்மானே) - மஹாலக்ஷ்மியின் நாதன், தானே சென்று யாசகம் கேட்ட விதம், தனது வடிவழகைக் காண்பித்து மஹாபலியை வாய் பிளக்கும்படிச் செய்த விதம், “கொள்வன் நான் மாவலி” என்பது போன்று சில மழலைச்சொற்கள் பேசிய விதம், சிறிய திருவடியால் காண்பித்து பின்னர் பெரிய திருவடி கொண்டு அளந்த விதம் என்பது போன்று வியக்க வைக்கும் செயல்கள் கூறப்பட்டது. (அம்மானே) - அவனைத் தண்டிக்காமல், அளந்து எடுத்து கொண்டதன் காரணம், அவனுடனான ஸம்பந்தமே ஆகும் என்பதற்கு ப்ரமாணம் ஜிதந்தா ஸ்தோத்ரம் - தேவாநாம் தாநவாகாஞ்ச ஸாமாந்யமதிதைவதம் – தேவர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோருடைய பொதுவான தெய்வம் – என்பதாகும். தனது அழகின் பலத்தைக் காண்பித்து இப்படியாகப் பெற வேண்டியதாக இருந்தது. (நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட) - ஆழ்வார் ஸர்வேச்வரனிடம், “இந்த்ரன் முதலியவர்களைப் போன்று எனக்கு ராஜ்யம் போன்றவற்றின் மீது ஆசை இல்லை. நீ எனக்கு அளித்த ஞானம் காரணமாக நான் உன் விஷயத்தில் த்ருப்தி அடையாமல் உள்ளேன். நான் உன்னை அடைந்து, உன்னைக் கண்டு மகிழ்ந்து, கூத்தாடும்படியாக நீ வரவேண்டும்”, என்கிறார். அவன் இவரிடம் வருவதற்கான செயல்களைச் செய்வது அவன் பொறுப்பு, அவன் வந்தால் மகிழ்வது மட்டுமே இவர் செயல் ஆகும். (நான் கண்டு உகந்து கூத்தாட) - மஹாபலியைப் போன்று நான் ஏதேனும் ஒன்றையாவது உனக்கு தருவதற்குத் தயாராக இல்லை. இந்த்ரனைப் போன்று ஏதும் கொள்வதற்கும் இல்லை. “எனக்கு” என்று இருந்த இந்த்ரன் மற்றும் “என்னுடையது” என்று இருந்த மஹாபலி ஆகியோருடன் மட்டுமே நீ “கொடுத்தும் கொண்டும்” செய்தபடி இருப்பதா? உன்னையே கண்டு மகிழ்ந்தபடி உள்ளவர்களுக்கு உன்னை நீ காண்பித்தால் ஆகாதோ? இவ்விடம் மகிழ்ந்தபடி உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதற்கு ப்ரமாணம் காண்பிக்கிறார்; மஹாபாரதம் உத்யோக பர்வம் – ஸம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதந்ந: பரமம் தநம் – க்ருஷ்ணா! எங்களுடைய பரபரப்பு மூலம் மட்டுமே நீ மகிழ்வாயாக. இதுவே எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்வாகும் – என்பது காண்க. (நண்ணி) - நான் உள்ள இடத்திற்கு நீ வந்து என்னைக் கிட்டி. (ஒருநாள்) - அஸுரனுடைய யாகசாலைக்கு நடந்து சென்ற அந்த செயலைப் பின்பு ஒருநாள் செய்தல் கூடாதோ? மண்ணும் விண்ணும் மகிழும்படி நடப்பது என்பது அஸுரன் மூலமாக மட்டுமே செய்வாயோ? நீ அல்லாமல் வேறு எந்தப் பயனையும் எதிர்பாராமல் உள்ளவர்கள் முன்பாக அவ்விதம் நடந்து வரக்கூடாதோ? (ஞாலத்தூடே நடவாய்) - உனது நடை அழகிற்கும் மற்றவர்கள் நடை அழகிற்கும் இடையே உள்ள வேறுபாடு அறிந்து அதில் ஈடுபடாமல், தனது தாராள குணத்தை மட்டுமே கொண்டாடியபடி உள்ள மஹாபலி முன்பாக இவ்விதம் நடந்து காண்பிக்கலாமோ? இதனைக் கேட்ட ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “மஹாபலி முன்பாக நாம் நடந்து காண்பித்தோம். உமக்கு முன்பாக நாம் நடக்கவில்லை. இதனால் அவனை வெறுப்பது ஏன்? அவனைக் காட்டிலும் உமக்கு உள்ள வேறுபாடு என்ன?”, என்றான். இதற்கு ஆழ்வார், “அவன் கறுத்த இதயம் கொண்டவன், நான் வெளுத்த இதயம் கொண்டவன்” என்கிறார். நடை அழகில் உள்ள “உள்ளே சிவப்பும், புறத்தில் கறுப்பும் என்னும் சேர்த்தி” கண்டு, அதனையே என் உயிர் தாங்கும் உபாயமாகக் கொண்டுள்ள என் முன்பாக நீ நடந்தால் ஆகாதோ?