திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 1)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய் கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே
நீரும், அந்த நீரின் கார்யமான பூமியும், அக்னியும் வாயுவும், இந்த நான்கு பூதங்களைக் காட்டிலும் ப்ரதானமான ஆகாசமும் என்பதான அனைத்தையும் ஸ்ருஷ்டித்து, அவற்றுக்குள் புகுந்து, அவற்றின் ஆத்மாவாகவும்; வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்கு ப்ரதான பூதராகவும், சந்த்ர சூர்யர்களும், ருத்ரன், நான்முகனும் உனக்குச் சரீரமாகும்படி அவர்களுடைய அந்தர்யாமியாக உள்ளவனே! இத்தகைய உனக்கே உரிய நிலை மட்டும் அல்லாமல், அடியார்களுடைய விரோதியை அழிப்பதில் கூர்மை கொண்ட சக்கரத்தாழ்வானையும், அடியார்களுக்குப் பவ்யமாக பரிசுத்தமான வெண்மையைக் கொண்ட ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் திருக்கரங்களில் ஏந்தி, லீலா விபூதி மற்றும் நித்ய விபூதி ஆகிய இரண்டும் வேறுபாடு இன்றி உகக்கும்படியாக, என்பக்கம் ஒருநாளாவது நீ நடந்து வரவேண்டும்.
– “ஜகதாகாரனாயிருக்கிறபடியைக் காட்டித் தந்தோமிறே” என்ன; அது போராது; அஸாதாரணமான வடிவைக் காணவேணுமென்கிறார்.
“இந்த ஜகத்தையே நமது திருமேனியாகக் கொண்டுள்ள நிலையை நாம் உமக்குக் காண்பித்துத் தந்தோம் அல்லவோ?”, என்ற ஸர்வேச்வரனிடம் ஆழ்வார், “அது போதாது. உனக்கே உரிய வடிவத்தைக் காண்பிக்கவேண்டும்”, என்கிறார்.
(நீராய் நிலனாய் இத்யாதி) “இதறியாமல் அவ்வருகே யாசைப்படுகிறார்” என்று கொள்ளவொண்ணாதபடி, தாம் அறிந்தமை தோற்ற விண்ணப்பஞ் செய்கிறார். (நீராய்) நாராயணனாவது பண்டேயறிவ னென்கிறார். “நீர்தொறும் பரந்துளன்” என்றாரிறே கீழ். (நீராய்) “அப ஏவ ஸஸர்ஜாதௌ” என்கிறபடியே ஏற்கனவே ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி அநந்தரம் ப்ருதிவ்யாதிகளை யுண்டாக்கி, இவற்றைக் கொண்டு கார்யங் கொள்ளுமிடத்தில் ஒன்றிலொன்று அதிகமாக வேண்டியிருக்குமிறே; “ஸமேத்யாந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாச்ரயா:” என்றிறே ஸ்ருஷ்டி க்ரமந்தான்; இவைதான் ஏக த்ரவ்யமுமன்றே; அநேக த்ரவ்யமா யிருக்கச்செய்தே ஏக த்ரவ்யமாக்கி ஏக கார்யங் கொள்ள வேணுமிறே: அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகுங் கூட்டிச் சேரத் துகைத்து கடாதிகளாய்க் கொண்டு பரிணமிப்பிக்குமாபோலே, ஜலத்தை யுண்டாக்கி, அது த்ரவீ பூதமாயிருக்கையாலே அத்தோடு கடினமான பதார்த்தத்தைக் கூட்டி, பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அத்தைச் சிறிது வலிக்கைக்காக தேஜ: பதார்த்தத்தை யுண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அத்தையாற்றுகைக்குக் காற்றை யுண்டாக்கி, அது, தனக்கு ஸஞ்சரிக்கைக்காக அவகாச ப்ரதாநம் பண்ணும் ஆகாசத்தை யுண்டாக்கி. இவ்வளவும் ப்ரதம ஸங்கல்பந் தன்னையே கொண்டு அண்ட ஸ்ருஷ்டியைப் பண்ணிநின்றது; இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டு வைக்கவொண்ணாதிறே; அதுக்கு இரண்டு விளக்கிட்டாற்போலே சந்த்ர சூர்யர்களை யுண்டாக்கி, நீர்க் களிப்பு அறுகைக்கும் ஆப்யாயநத்துக்குமாக இருவரையுமுண்டாக்கினபடி. (சிவனாய் அயனானாய்) அண்டாந்தாவர்த்திகளாய்க் கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டு வர ஒருவன் அழித்துக் கொடு வரும்படி ப்ரஹ்ம ருத்ரர்களை யுண்டாக்கி. ருத்ரனை முற்படச் சொல்லுவானென்? என்னில், அப்யய பூர்விகையாயிறே ஸ்ருஷ்டியிருப்பது. “நீராய் நிலனாய்” என்றத்தோடொக்க. “சீரார் சுடர்களிரண்டாய்” என்கையினாலே, “யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம்” என்கிறபடியே, சேதநாசேதங்களிரண்டும் அவனுக்கு சரீரவத் பரதந்த்ரமென்னுமிடஞ் சொல்லுகிறது. “சீரார் சுடர்களிரண்டாய்” என்றும், “சிவனாயயனானாய்” என்றும் ஸமாநாதிகரிக்கையாலே ஈசிதவ்யங்களோடு ஈச்வராபிமாநிகளோடு வாசியற தத் பரதந்த்ர மென்னுமிடஞ் சொல்லிற்று. ஐகத் ஸ்ருஷ்டி பண்ணிற்று ஸ்வப்ராப்திக்காகவன்றோ? ஸ்வப்ராப்தியைப் பண்ணித் தந்தாலன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது? ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநமாவது நித்யது:கியானவனை “அந்தமில் பேரின்பத்தே” கொடு போய் வைக்கையன்றோ. அது கிடக்க, இத்தை யுண்டாக்கினதுக்கு ப்ரயோஜநம் நீ பெற வேண்டாவோ? “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாயயனானாய்” என்று இவர் தமக்கு ஈச்வர வ்யாபாரம் அடங்கலும் மனையடைவே எண்ணுவாரைப்போலே அதிப்ரகாசமா யிருக்கிறபடி. – (கூராராழி வெண்சங்கேந்தி) ஸ்ரீபாஞ்சஜந்யத்தில் வெண்மையோபாதி திருவாழியில் கூர்மையும் இவர்க்கு ஆகர்ஷகமாயிருக்கிறபடி. (கூராராழி) ப்ரதிபக்ஷத்தைத் துணிக்கத் துணிக்கச் சாணையிலேறிட்டாற்போலே கூர்மை மிக்கிருக்கிறபடி. அஸாதாரண விக்ரஹத்துக்கு லக்ஷணமோதான் கையுந் திருவாழியுமா யிருக்கை! (கொடியேன்) எனக்கு இங்ஙனே ஒரு நிர்ப்பந்தமுண்டாவதே! என் ஸ்வரூபத்துக்கு விருத்தங்கிடீர் நான் பண்ணுகிறது! ஸ்ரீபரதாழ்வானைப் போலே பொகட்ட விடத்தே கிடக்கவல்ல ப்ரக்ருதியாகப் பெற்றிலேன்; இளையபெருமாளைப் போல, “நில்” என்ன, “குருஷ்வ” என்று நிர்ப்பந்திக்கும் ப்ரக்ருதியாவதே! (வாராய்) ஆசைப்பட்டாலும் நடக்கவல்லார் வருமித்தனையிறே; “வாராய்” என்னுங்காட்டில் வந்து கொடு திரியப்போமோ? என்னில்; (ஒருநாள்) நானுளனாகைக்காக. விடாயர் “ஒருகால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்” என்னுமாபோலே. (மண்ணும் விண்ணும் மகிழவே) எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி யழியாமைக்கு வா என்கிறார். “மானாவிச்சோலைபோலே ஆவதழிவதான இது போனால் என் செய்யவேணும்?” என்றிருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங் கிடாய்: இது அழியவே அதுவும் அழிந்ததாமிறே; அதுவும் இருக்கச் செய்தேயன்றோ, இது அழிய “ஸ ஏகாகீ ந ரமேத” என்றது. இனித்தான் ப்ரளயத்துக்கழியா தென்னுங்காட்டில், ஆர்த்திக்கும் அழியாதென்றதாகாதே! (மகிழவே) அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக.
– (நீராய் நிலனாய் இத்யாதி) – “இந்த ஜகத்தே தனது சரீரம் என்றுள்ள தன்மை” இவருக்கு அடையக்கூடிய இலக்காக இல்லை என்றால், “யாவையும் யாவருமாய் நின்ற மாயன்” என்று அனைத்தையும் தொகுத்துக் கூறாமல், “நீராய் நிலனாய்” என்று தொடங்கி, தனித்தனியே ஏன் விவரித்துக் கூறவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார்; “இவற்றை அறியாமல் அவன் விஷயத்தில் இவர் ஆசைப்படுகிறார்” என்று யாரும் கூற இயலாதபடி, தான் அறிந்தவை வெளிப்படுத்தும்படியாக விண்ணப்பம் செய்கிறார். (நீராய்) - ஜலத்தின் அந்தர்யாமியாக உள்ள தன்மையைக் கூறுகிறார்; நாராயணன் என்ற தன்மையை முன்பே அறிவேன் என்கிறார். அதாவது தண்ணீருக்குக் காரணமாக, அதனைத் தனது சரீரமாகக் கொண்ட இருப்பை நான் முன்பே அறிவேன் என்கிறார். தான் முன்பே அறிந்தமைக்கு சூசகம் என்ன என்பதற்கு விடையாக திருவாய்மொழி (1-1-10) - நீர்தொறும் பரந்துளன் - என்றார். (நீராய்) - பஞ்சபூதங்களைக் கூறும்போது, முதலில் நீரைக் கூறுவதற்கான ப்ரமாணம் காண்பிக்கிறார்; மநுஸ்ம்ருதி (1-8) - அப ஏவ ஸஸர்ஜாதௌ – முதலில் நீரைப் படைத்தான் – என்பதற்கு ஏற்ப நீரை முதலில் ஸ்ருஷ்டி செய்து, அதன் பின்னர் நிலம் போன்றவற்றை உண்டாக்கி, இந்தப் பஞ்சபூதங்கள் கொண்டு கார்யப்பொருள்களை உண்டாக்குவதில், ஒன்றில் ஒன்று அதிகமாக இருக்கவேண்டும் என்பதாக ஏற்படுத்தினான்; இதன் மூலம் பஞ்சீகரணத்தை கூறினார். “ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டியிருக்குமன்றோ” என்பதன் மூலம், “பிரிக்கப்படும் ஒரு பாதியைக் காட்டிலும், பிரிக்கப்படாத ஒரு பாதி முதன்மையாக இருக்கவேண்டும்” என்று கூறப்பட்டது. “ஒன்றில் ஒன்று அதிகமாக” என்பதற்கு ப்ரமாணம் ஸ்ரீவிபு (1-2-54) - ஸமேத்யாந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாச்ரயா: – பஞ்சபூதங்களும் ஒன்றில் ஒன்று கலந்து, ஸம்பந்தம் அடைந்தன - என்பதாக ஸ்ருஷ்டி முறை உள்ளது. – ஆனால், ஒன்றில் ஒன்று அதிகமாக உள்ளதை ஸ்ருஷ்டி வரிசையாக ஏன் கொள்ளவேண்டும்? அனைத்தும் சமமாக உள்ளதையே ஸ்ருஷ்டி முறையாகக் கொள்ளாமல் அல்லவோ? இவற்றுக்கு விடை தருகிறார்; இதற்கு ஸ்ரீவிபு (1-2) - நாநா வீர்யா: ப்ருதக் பூதா - என்ற ச்லோகத்தின் அடிப்படையில் பொருள் கூறுகிறார். இவை அனைத்தும் ஒரு பொருள் அல்ல; இவை பல பொருள்களாக உள்ளபோதிலும், ஒரே பொருளாக்கி, ஒரு கார்யம் செய்து கொள்ளவேண்டும் அல்லவோ? இவ்விதம் பல பொருள்களையும் ஒரே பொருளாக்கி கார்யம் கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணம் காண்பிக்கிறார்; ஒரு குயவர், மண்ணையும் நீரையும் ஒன்றாகக் சேர்த்து, நன்கு சுற்றி, குடம் போன்ற பொருள்களை உண்டாக்குகிறார்; இது போன்று இங்கு முதலில் நீர் உண்டாக்கப்பட்டு, இது நீர்ப்பண்டமாக உள்ளதால் அதனுடன் கடினமான பொருள்களைச் சேர்த்து, பின்னரும் அது நெகிழ்ந்துள்ளதால் அதனை மேலும் சற்று கடினமாக்க ஒளியை ஏற்படுத்தி, இவை அனைத்தையும் தனது முதல் ஸங்கல்பத்தை மட்டுமே கொண்டு, அண்ட ஸ்ருஷ்டியைச் செய்தான். அடுத்து, பெரிய ஒரு மாளிகையை ஏற்படுத்திய பின்னர், அதனை இருளில் உரையும்படிச் செய்யக்கூடாது அல்லவோ? ஆகவே இங்கு இரண்டு விளக்குகள் வைத்தது போன்று சந்த்ரசூர்யர்களை ஏற்படுத்தினான். இந்த இருவரில் ஒருவரை மட்டும் படைத்தால் போதாதோ? இருவர் எதற்கு? இதற்கு விடை அளிக்கிறார். நீர்களிப்பு அறுவதற்காகவும், வளர்ச்சி பெறுவதற்காகவும் இரண்டு பேரையும் ஸ்ருஷ்டித்தான். – (சிவனாய் அயனானாய்) - அண்டங்களுக்குள் வாழ்பவராக, ஒருவன் படைத்தபடி உள்ளபோது, ஒருவன் அழித்தபடி உள்ளதாக நான்முகனையும் ருத்ரனையும் உண்டாக்கி. ஆனால், இங்கு படைப்பவனாகிய நான்முகனை முதலில் கூறாமல், அழிப்பவனாகிய ருத்ரனை ஏன் முதலில் கூறுகிறார்? ஏனென்றால், அழித்தலை முற்படக்கொண்டு அல்லவோ படைத்தல் உள்ளது என்பதால் ஆகும். “நீராய் நிலனாய்” என்பதைத் தொடர்ந்து சந்த்ர சூர்யர்களைக் கூறியதற்கும், சந்திர சூர்யர்களைக் கூறியதைத் தொடர்ந்து நான்முகன் ருத்ரர்களைக் கூறியதற்கும் உள்ள எண்ணம் என்ன என்பதைக் கூறுகிறார்; “நீராய் நிலனாய்” என்பதுடன் சேரும்விதமாக “சீரார் சுடர்கள் இரண்டாய்” என்று கூறியதால், ப்ருஹத் உபநிஷத்தில் – யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் - யாருக்கு ஆத்மா சரீரமோ, யாருக்கு ப்ருத்வீ சரீரமோ - என்பதற்கு ஏற்ப, சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் ஆகிய அனைத்தும் அவனுக்குச் சரீரம் போன்று, அவன் வசப்பட்டவை என்பது கூறப்பட்டது. “சீரார் சுடர்களிரண்டாய்” என்றும், “சிவனாய் அயனானாய்” என்றும் ஒற்றுமைப்படுத்திக் கூறுவதால், நியமிக்கும்படுகின்ற பொருள்களாகிய சந்திரன் சூர்யன், நியமிப்பவர்களாகத் தங்களை எண்ணிக் கொள்ளும் நான்முகன் ருத்ரன், என்பதான வேறுபாடு ஏதும் இன்றி அனைத்தும் அவன் வசப்பட்டவை என்பது வெளிப்படுகிறது. – அடுத்து “நீராய் நிலனாய் ... அயன் ஆனாய்” என்பதற்கு இரண்டு பொருள்கள் அருளிச்செய்கிறார். இவற்றில், முதல் கருத்தாக, “இந்த ஜகத்தையே தனது சரீரமாகக் கொண்ட இருப்பைக் காட்டினால் போதாது. உனக்கே உரிய திருமேனியைக் காண்பிக்க வேண்டும்” என்பதை இந்தப் பாசுரத்தின் அவதாரிகை மூலமாகவும், “இது அறியாமல்” என்று வ்யாக்யான தொடக்கத்தின் மூலமாகவும் கூறினார். அடுத்து இரண்டாவது கருத்தாக, ஸ்ருஷ்டியின் பயன் என்பது அனைவரும் மோக்ஷம் பெறுவதே ஆகும் அல்லவோ என்று கூறி, இதனை “ஜகத் ஸ்ருஷ்டி” என்பது தொடங்கி அருளிச் செய்கிறார்; இந்த ஜகத்தை நீ படைத்தது, இவை உன்னை அடையவேண்டும் என்பதற்காக அல்லவோ? இவ்விதம் “உன்னை அடைதல்” என்பதை நீ செய்தால் மட்டுமே, நீ ஒரு கார்யம் செய்தவன் என்றாகிறாய்! ஸ்ருஷ்டியின் ப்ரயோஜனம் என்பது, எப்போதுமே துக்கத்தில் உள்ளவனை “அந்தமில் பேரின்பத்தே” என்பதாக உள்ல மோக்ஷத்திற்குக் கொண்டு செல்வது அல்லவோ? எனது துயரத்தைப் போக்குதல் என்பது ஒருபுறம் உள்ளபோது, இந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்த ப்ரயோஜனத்தை நீ பெறவேண்டாமோ? அவனைட் தனது கண்களால் காணவேண்டும் என்பது மட்டும் அல்லாமல், ஸ்ருஷ்டித்தல் போன்ற செயல்களையும் அருளிச்செய்ததால், இவருடைய ஞானத்தின் தெளிவை எண்ணி, வ்யாக்யானம் செய்தவர் “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாயயனானாய்” என்று ஈடுபடுகிறார். அதாவது, “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாயயனானாய்” என்று ஆழ்வார்ருக்கு ஈச்வரனுடைய செயல்கள் குறித்து முற்றிலுமாக ஞானமானது ப்ரகாசமாகவே உள்ளது. – (கூராராழி வெண்சங்கேந்தி) - “வெண்சங்கு” என்பது போன்று, அழகிற்குக் காரணமாக உள்ளதாகச் சக்கரத்தாழ்வானைக் கூறாமல், கூர்மையை ஏன் கூறினார் என்றால், ஸ்ரீபாஞ்சஜந்யத்தின் வெண்மையைப் போன்றே சக்கரத்தின் கூர்மையும் இவரைக் கவர்ந்து இழுப்பதாக உள்ளது. (கூராராழி) – “ஆர்” என்பதற்கு பொருள் கூறுகிறார்; விரோதிகளை அழிக்க அழிக்க, சாணைக் கல்லில் ஏற்றப்பட்டது போன்று கூர்மை அதிகமாவதால், இவ்விதம் கூறினார். அவனுக்கே உரிய திருமேனியைக் காண விரும்பும் இவர், “கூராராழி வெண்சங்கேந்தி” என்று ஏன் கூறவேண்டும் என்றால், அவனுக்கே உரியதான திருமேனியின் அடையாளம், “திருக்கரமும் சக்கரமும்” என்று இருந்தலே ஆகும். – (கொடியேன்) - எனக்கு இப்படியொரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறதே! எனது “அவனுக்கு மட்டுமே வசப்பட்ட நிலை” என்பதான எனது ஸ்வரூபத்திற்கு விரோதம் உண்டாகும்படி நான் செய்கிறேன். இதனை ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார்; ஸ்ரீபரதாழ்வான் போன்று விட்டுச் சென்ற இடத்திலேயே கிடக்கவல்ல தன்மை கொண்டிருக்கவில்லை. மாறாக, லக்ஷ்மணனைப் போன்று, இராமன் “இங்கேயே இருப்பாயாக” என்று கூறியபோதிலும், அயோத்யாகாண்டம் (31-22) – குருஷ்வ - என்னைக் கைங்கர்யம் செய்ய ஏற்பாயாக - என்று நிர்ப்பந்தம் செய்யும் தன்மை கொண்டவனாக உள்ளேன். – (வாராய்) - அவன் வரவேண்டும் என்று ஏன் இவர் ஆசைப்படவேண்டும், மாறாக இவர் அங்கு செல்லலாம் அல்லவோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; ஆசைப்பட்டாலும், நடக்கவல்லவர் வருவார்கள் அல்லவோ? “வாராய்” என்று கூறியவுடன் வந்து நிற்பானோ? அல்லது, அவனை எங்களால் கொண்டு வந்து நிறுத்த இயலுமோ? (ஒருநாள்) – நான் ஒரு பொருளாக இருப்பதற்கு உயிர் தரிக்கவேண்டும் அல்லவோ, அதற்காகவாவது. தாகம் கொண்டவன் “ஒருமுறை நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் வேண்டும்” என்று உள்ளது போன்று இவரும் கூறுகிறார். (மண்ணும் விண்ணும் மகிழவே) - எனது இருப்பு என்பது அழியாமல் இருப்பதற்காக வரவில்லை என்றாலும், உனது இருப்பு என்பது அழியாமல் இருப்பதற்காகவாவது வருவாயாக என்றார். மஹாநவமியில் செய்யப்படும் அலங்காரம் போன்று, ஆவதும் அழிவதும் என்றுள்ள இந்த லீலாவிபூதி அழிந்தால் என்ன என்று நீ உள்ளாய் என்றால், அந்த நித்யவிபூதியும் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்வாயாக. ஆனால், நித்யவிபூதியும் அழியுமோ என்றால், லீலாவிபூதி அழிந்தால், அதுவும் அழியும். அது நிலையாக உள்ளபோது, இது மட்டுமே அழிந்தபோது அல்லவோ உபநிஷத்தில் “ஸ ஏகாகீ ந ரமேத - தனியே இருந்த அவன் மகிழ்ச்சி கொள்ளவில்லை” என்று கூறப்பட்டது. ப்ரளயத்தில் அழியாது என்றபோதிலும், துன்பத்திற்கு அழியாமல் இருக்கும் என்று கருத்து அல்ல அல்லவோ? (மகிழவே) – அழிதல் நீங்கி உயிர் தரிப்பதற்காக.