திருவாய்மொழி - ஆறாம்பத்து (pravesam 1)
ஆறாம்பத்து
ப்ரவேசம் - ஒன்பதாம் திருவாய்மொழி
நீராய் ப்ரவேசம்
– “எங்குச் சென்றாகிலுங் கண்டு” என்றும், “வானவர்கோனைக் கண்டு” என்றும் தூது போகச்சொன்னார்; அவை போகமாட்டாதபடி தம்முடைய ஆர்த்த த்வநியாலே யழித்தார்; “மரங்களுமிரங்கும்” என்று அசேதநங்களிரங்காநின்றால், சிறிது சைதந்யமுடைய பக்ஷிகள் அழியக் கேட்க வேண்டாவிறே; “ஊற்றின்கண் நுண்மணல் போலுருகா நிற்பர் நீராய்” என்றது, தூதரையொழியன்றிறே. தம் பரிஸரத்தில் கால்நடை தந்து போவாரில்லையே. – “அசேதநங்களுங்கூட அழிகிறவிடத்தில், பரமசேதநனானவனுக்குச் சொல்ல வேணுமோ?” என்று பார்த்து, தம்மிடற்றோசையையிட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார். தமக்கு ஆர்த்த த்வநி கிடக்க, வேறொருவர் போகவேண்டும்படியா யிருந்ததோ? “கலங்காப் பெருநகர”மான ஸ்ரீவைகுண்டத்திலும் தரிக்கவொண்ணாதபடி, கால்குலைந்து வரும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகிறார். இனித்தான் தூது போவார்க்கு, காலாலேயாதல் சிறகாலேயாதல் போகவேண்டுகையாலே தடையுண்டு; இவர் மிடற்றோசைக்குத் தடையில்லையிறே! இவர் படுகிற வ்யஸநத்துக்கு ஹேது சொல்லப் போகாது, பிராட்டி சிறையிருந்ததுக்கு ஹேது சொல்லப்போகாதாப்போலே. அவளிருப்பு பராநுக்ரஹத்தாலே யானாற்போலே இவருடைய வ்யஸநமும் பராநுக்ரஹத்துக்கு உடலாயிருக்கிறபடி. அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீவால்மீகி பகவானெழுதி வைத்து இன்று நாடெல்லாம் வாழ்கிறாப்போலே, அன்று இவர்தாம் வ்யஸநப்பட்டாரே யாகிலும், இவர் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் லோகத்துக்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது. திருக்குழலோசையாலே திருவாய்ப்பாடியிற் பெண்களெல்லாம் பட்டத்தைத் தம்மிடற்றோசையாலே அவன் படும்படி பண்ணுகிறார். – “வாரீர்! நீர் நம்மை யிருந்தவிடத்தில் இருக்கவொட்டாதே இங்ஙன்படுத்துகிறதென்? நாம் உம்மை விட்டுத் தூரப் போனோமோ? ஏதேனுமொன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்றென்று சொல்லலாம்படியிருக்கிற ஜகதாகாரதையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக; அதில் குறையென்? நீ ஜகச்சரீரனாய் நிற்கிற இந்த ஜ்ஞாநமெனக்கில்லையோ? இந்த ஜ்ஞாநந்தானேயிறே “அஸாதாரணாகாரத்தையும் காணவேணும்” என்னப் பண்ணுகிறது; எனக்கு ப்ராப்யமானது கிடக்க, அல்லாதவற்றைக் காட்டினால் அப்ரயோஜநமென்கிறார். அத்தையும் உன் ஐச்வர்யத்துக்குப் புறம்பல்லாமையாலே வேணுமாகில் ப்ரதிபத்தி பண்ணுகிறேன்; அத்தால் வந்தது, உன்னதானவற்றை “என்னது” என்றிருக்கிற ப்ரமம் நிவ்ருத்தமாகிறது. அர்ஜுநனும் ஸ்ரீவிச்வரூபங் கண்டவநந்தரத்திலே “தேநைவ ரூபேண சதுர்ப்புஜேந” என்று அஸாதாரணமான வடிவை யெனக்குக் காட்டவேணும் என்றானிறே. என் ஆர்த்த த்வநி கேட்டிரங்கி வந்திலையாகிலும், உன்னுடைய விபூதி யழியாமல் நோக்கவேணுமாகில், வாவென்கிறார் என்றுமாம். இவருடைய ஆர்த்த நாதந்தான் அவனுக்கு உபயவிபூதியிலும் குடியிருப்பரிதாய்க் காணும் இருக்கிறது.
– திருவாய்மொழி (6-8-5) - எங்குச் சென்றாகிலும் கண்டு – என்றும், திருவாய்மொழி (6-8-8) - வானவர்கோனைக் கண்டு - என்றும் கூறி, தூது போகும் படியாக உரைத்தார். அவை செல்ல இயலாதபடி தனது துன்பம் நிறைந்த சொற்களால் தடுமாறச் செய்தார். ஆனால் இவ்விதம் பறவைகள் இரக்கம் கொண்டு ஈடுபட்டு நிற்குமோ என்பதற்கு விடை தருகிறார்; திருவாய்மொழி (6-5-9) – மரங்களும் இரங்கும் - என்பதாக, சிறிதும் அறிவில்லாத பொருள்களும் இரங்கும் என்றுள்ளபோது, சிறிது அளவு அறிவு கொண்ட பறவைகள் இரங்குவது குறித்துக் கூறவேண்டாம் அல்லவோ? திருவாய்மொழி (6-8-11) - ஊற்றின்கண் நுண்மணல் போலுருகா நிற்பர் நீராய் – என்பது, தூதுவர்கள் அல்லாமல் வேறு யாரும் அல்லர்; ஆகவே தன்னிடம் தனக்காகத் தூது செல்பவர்கள் வேறு யாரும் இல்லையே! – ஆயினும் இவர் செய்தது என்ன? “அறிவற்ற வஸ்துக்களும் கூட எனது நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளும்போது, அனைத்து சேதநர்களையும் விட உயர்ந்த சேதநன் ஈடுபாடு கொள்வது குறித்துக் கூறவும் வேண்டுமோ?”, என்று ஆராய்ந்து, தனது துன்ப ஒலியை எழுப்பி, அவனைத் தன்னிடம் அழைத்துக் கொள்ள முயல்கிறார். ஆனால், தனக்குத் துன்ப ஒலி உள்ளபோது, வேறு ஒருவர் அவனிடம் செல்ல வேண்டும்படியாக உள்ளதோ என்பதற்கு விடை தருகிறார்; இவருடைய இத்தகைய துன்ப ஒலியின் உறைப்பைக் கூறுகிறார்; மூன்றாம் திருவந்தாதி (51) – கலங்காப் பெருநகரம் - என்பதாக உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பு கொள்ளாமல், கால்குலைந்து அவன் ஓடி வரும்படியாக பெருத்த துன்ப ஒலியை எழுப்பி அவனை அழைக்கிறார். – இவருக்குக்காகத் தூது செல்பவர்கள் இல்லை என்பதால், தானே அழைக்கிறார் என்று கூறப்பட்டது; அடுத்து, அவ்விதம் தூது செல்பவர்கள் உள்ளனர் என்றாலும், தனது அழைத்தல் என்பதே சிறந்த உபாயம் என்பதை “இனித்தான்” என்று கூறுகிறார்; அதாவது, தூது செல்பவர்களுக்குக் கால்கள் வேண்டும் அல்லது சிறகுகள் வேண்டும்; ஆகவே தடைகள் உண்டு; ஆனால் இவருடைய புலம்பல் ஓசைக்குத் தடை ஏதும் இல்லை அல்லவோ? ஆனால், திருவாய்மொழி (2-6-2) - பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே - என்று கூறுவதற்கு ஏற்ப, பக்கம் நோக்கு அறியாதவன், அவரை இவ்விதம் கூப்பிட வைப்பதற்கான காரணம் என்ன என்பதை கூறுகிறார்; ஸீதை சிறையில் இருந்தமைக்கான காரணம் என்னவென்று அறியாதது போன்று, இவர் அடையும் துன்பத்திற்கான காரணமும் அறிய இயலாது. சரி, கர்மத்தைக் காரணம் என்று கூறலாம் அல்லவோ? இதற்கு “அவள் இருப்பு” என்று தொடங்கி விடை அளிக்கிறார். ஸீதையின் இலங்கை இருப்பு என்பது, அவள் மற்றவர்கள் மீது காண்பிக்கும் கருணை காரணமாகவே ஆகும் என்பது போன்று, இவருடைய துன்பமும், இவர் மற்றவர்கள் மீது வைக்கும் கருணையின் காரணமாகவே உள்ளது; அதாவது, மற்றவர்களுக்குப் புகலிடமாக ஸீதை இலங்கையில் இருந்தது போன்று, இவரும் மற்றவர்களுக்குப் புகலிடமாக விளங்கி துக்கத்தில் இருந்தாலும், இவர் சில காலம் இந்த உலகத்தில் இருந்தால் “நாடாகத் திருந்தும்” என்று எண்ணி அவன் விட்டு வைப்பதால், இவர் அடையும் துன்பத்திற்கான காரணம் கர்மமே ஆகும் என்றும் கூற முடியாது. ஸீதை சிறையிலிருந்தது குறித்து ஸ்ரீவால்மிகி பகவான் எழுதி வைத்து, அதனைப் படித்து இன்று நாடு முழுவதும் நல்வாழ்வு அடைந்தபடி உள்ளது; இதனைப் போன்று அன்று இவர் துன்பத்தில் இருந்தார் என்றாலும், இவர் அருளிச்செய்த ப்ரபந்தங்களானவை, உலகிற்குத் தண்ணீர்ப்பந்தல் போன்று உள்ளன. ஆனால் இருவருடைய புலம்பல் ஒலிக்கு அவன் ஈடுபவனோ என்பதற்கு விடை அளிக்கிறார்; இதற்கு “ஸிம்ஹ அவலோகந ந்யாயம்”, அதாவது சிங்கம் நடக்கும்போது திரும்பிப் பார்த்தபடி செல்லும் வழக்கத்தின்படி, உதாரணத்துடன் விடை அளிக்கிறார்; அவனுடைய திருக்குழல் ஓசை மூலம் திருவாய்ப்பாடியில் இருந்த பெண்கள் அனைவரும் அடைந்த நிலையை, அவன் இவருடைய இந்தப் புலம்பல்களைக் கேட்டு அடைகிறான்; இங்கு “ஸிம்ஹ அவலோகந ந்யாயம்” எப்படியென்றால், “திருக்குழல்” என்று தொடங்கும் வாக்கியத்தை, முன்புள்ள “இவர் மிடற்றோசைக்குத் தடையில்லையிறே” என்ற வாக்கியத்துடன் சேர்ப்பதன் மூலம் ஆகும். – முதல் பாட்டில், இந்த ஜகத் என்பதே உருவமாக உள்ள தனது தன்மையை ஸர்வேச்வரன் ஏன் கூறுகிறான் என்பதற்கு விடை அளிக்கிறார்; இது முன்பு கூறப்பட்ட” திருவாய்மொழி (4-1-2) - யாவையுமாய் யாவருமாய் - என்பதைத் திருவுள்ளத்தில் கொண்டு ஆகும். ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “வாரீர் ஆழ்வாரே! நாம் நமது இடத்தில் இருக்கவிடாமல் நீவிர் ஏன் நம்மை இவ்விதம் படுத்தியபடி உள்ளீர்? நாம் உம்மை விட்டு அகன்று நீண்ட தூரமாகச் சென்றோமா? நீவிர் எந்த ஒன்றைப் பற்றினாலும், அது நம்மையே பற்றியபடி உள்ளதாகும் என்று கூறலாம்படியாக, இந்த ஜகத்தையே நாம் நம்முடைய உருவமாகக் கொண்ட நிலையை உமக்கு முன்பே காண்பித்தோம் அல்லவோ?”, என்றான். இதற்கு ஆழ்வார் ஸர்வேச்வரனிடம், “நீ இந்த ஜகத்தையே உனது திருமேனியாகக் கொண்டுள்ள ஞானம் எனக்கு இல்லையோ? உள்ளது, ஆனால் இத்தகைய ஞானம் அல்லவோ, உனக்கே உரியதான இருப்பையும் நான் காணவேண்டும் என்னும்படி என்னைத் தூண்டுகிறது? ஆகவே எனக்கு அந்தப் பேறானது வேண்டும் என்றுள்ளபோது, அதனைக் காட்டிலும் வேறு விஷயங்களைக் காண்பித்து எந்தப் பயனும் இல்லை”, என்கிறார். ஆனால் இவன் ஜகத்தைத் தனது திருமேனியாகக் கொண்டிருத்தல் என்றுள்ள நிலையானது பேறு இல்லையோ என்பதற்கு விடை அளிக்கிறார். அந்த நிலையும் உனது எல்லையற்ற ஐச்வர்யத்திற்குப் புறம்பாக இல்லாத காரணத்தால், உனக்கு வேண்டும் என்றால், அறிந்து கொள்கிறேன். இதன் மூலம் கிட்டிய பலன் என்ன என்றால், உனக்கு உடைமையாக உள்ள அனைத்தையும் என்னுடையது என்று கொண்டாடிய எனது மயக்கம் நீங்கப் பெற்றது ஆகும். “இத்தகைய ஞானம் அல்லவோ, உனக்கே உரியதான இருப்பையும் நான் காணவேண்டும் என்னும்படி என்னைத் தூண்டுகிறது” என்று கூறியதற்கு ஓர் உதாரணம் காண்பிக்கிறார்; அர்ஜுனன் விச்வரூபத்தைக் கண்ட பின்னர், கீதை (11-40) - தேநைவ ரூபேண சதுர்ப்புஜேந - பல திருக்கரங்கள் கொண்ட விச்வ மூர்த்தியே! உன்னை நான் நான்கு திருக்கரங்களுடன் கூடிய வடிவத்தில் காண விரும்புகிறேன் – என்று, “உனக்கே உரிய வடிவத்தைக் காணவேண்டும்” என்று கூறினான் அல்லவோ? எனது துன்ப ஒலியைக் கேட்டு இரங்கி நீ வரவில்லை என்றாலும், உனது உடைமையாகிய பலவற்றில் ஒருவனாக உள்ள நான் அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவாவது வரவேண்டும் என்கிறார் என்றும் கூறலாம். அவன் வராவிட்டால் அழியுமோ என்பதற்கு விடை தருகிறார். இவருடைய துன்பம் நிறைத்த ஒலியானது அவனுக்கு இரண்டு விபூதிகளிலும் இருப்பதற்கு அரிதாக ஆக்குகிறது.