பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 1)

முதல்பத்து

இரண்டாம் திருமொழி

சீதக்கடலுள் அமுது அன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே

குளிர்ந்த கடலில் பிறந்த அமிர்தத்தின் சாரமாக உள்ள பெண் அமிர்தமாகிய மஹாலக்ஷ்மியைப் போன்ற தேவகிப்பிராட்டியானவள், பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய யசோதைப்பிராட்டியிடம் அனுப்பிய, பருவத்திற்குத் தக்க அறிவு இல்லாத குழந்தையானது, தனது கையால் தனது திருவடியைப் பிடித்துச் சுவைத்து தனது பவளவாயில் வைத்து உண்ணும் தாமரைத் திருவடிகளை வந்து காணுங்கள்! பவளம் போல் சிவந்த இதழ்களை உடைய பெண்களே! விரைவாய் வந்து காணுங்கள்!

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (சீதமித்யாதி) அகாதமாகையாலே குளிர்ச்சி மாறாதிருக்கிற ஸமுத்ரத்தில் “கடலுள்ளமுது” என்கையாலே புறவமுது தோன்றிற்றிறே. “விண்ணவரமுதுண வமுதில் வரும் பெண்ணமுது”. பரோபகார சிந்தை பண்ணுகையாலே இந்த தேவகியும் பரோபகாரமாக ஈச்வரனைத் திருவாய்ப்பாடி முதலாக எல்லார்க்கும் உபகரித்தாளிறே. இவ்வுபசாரம் கம்ஸ பீதி மூலமாகையாலே. “உள்ளமுதன்ன தேவகி” என்கையாலே வைதர்ம்யத்திலேகதேச த்ருஷ்டாந்தமாகக் கடவது. பிறப்பிக்கப் பிறந்த அம்ருத துல்யையான ஸாது ஜனங்களுக்கு அக்ரேஸரையான தேவகியார் புஷ்பாதிகளாலே அலங்க்ருதமான குழலையுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிட்ட. “போத்து” என்றது போக்கினவென்றபடி. “அந்த” என்று சுட்டாகவுமாம். அன்றிக்கே, “போத்தந்த” என்று ஒரு சொல்லாய் கிடக்கிறதாய், அத்தாலும் போகவிட்டென்றபடி. (பேதை) பருவத்துக்குத் தக்க அறிவில்லாமை, (குழவி) பருவம் (பிடித்தித்யாதி) திருக்கையாலே திருவடிகளைப் பிடித்து. “தேனே மலரும் திருப்பாதம்” என்று தன் திருவடிகளில் விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே, “இது பரீக்ஷிக்க வேணும்” என்று திருப்பவளத்தில் வைத்தானென்னுதல்; “அழுங்குழவி போல்”வார் விரும்புகையாலே தானும் தாரக போக்யங்களாக விரும்பினானென்னுதல்; அன்றிக்கே அந்தர்க்கதமான வையமேழுக்கும் சிறைச்சோறு ஆக்கினானாதல், இவை புறப்படாமல் திருவிரலாலே கண் செறியிட்டானாதல். இவர் அவதாரத்தில் மெய்ப்பாட்டெல்லாம் தோற்றி, அநுபவிக்கிறாரிறே. (பாதக்கமலமித்யாதி) “வேதம் வல்லார்களைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணி”ய வேண்டுகையாலே இவர் காட்டக் காணவேணுமிறே. “வேதப்பயன் கொள்ளவல்லார்”வரிறே. (பாதமித்யாதி) திருவடித்தாமரைகளை வந்து காணுங்கோளென்கிறார். அறிவுடையார் காட்டக் காணவேணுமிறே. “பவளவாயீர் வந்து காணீரே” என்று பின்பு மருளிச்செய்கையாலே ப்ரபத்தியின் மேலேறின பக்தியையும் பவ்யதையையு முடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளேயுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யரென்கிறார். மாமுனிகள் வ்யாக்யானம் - (சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி) அகாதமாகையாலே குளிர்த்தி மாறாத ஸமுத்ரத்திலே தேவபோக்யமாகப் பிறந்த அம்ருதம் புறவமுதாம்படி, “அமுதில் வரும் பெண்ணமுது” என்கிறபடியே உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த தேவகிப்பிராட்டி. அதாவது, அவள் பரோபகார சீலையானாப்போலே, இவளும் பரோபகார சீலையென்றபடி. (கோதைக் குழலாளசோதைக்குப் போத்தந்த) பூமாலையாலே அலங்க்ருதமான குழலையுடைய யசோதைப் பிராட்டிக்கு, போகவிட்ட - வரவிட்டவென்றபடி. “போத்தந்த” என்று ஒரு முழுச்சொல்லு. மாமுனிகள் வ்யாக்யானம் - (பேதைக்குழவி) “முக்தச்சிசு:” என்னுமாபோலே. (பேதை) பருவத்துக்குத் தக்கவறிவில்லாமை. (குழவி) பருவம். (பிடித்துச் சுவைத்துண்ணும்) திருக்கையாலே பிடித்துத் திருப்பவளத்திலே வைத்து ஆஸ்வாதித்து புஜிக்கும். “வடதளமதிசய்ய ரங்கதாமந்! சயித இவார்ணவ தர்ணக: பதாப்ஜம் | அதிமுகமுதரே ஜகந்தி மாதும் நிததித வைஷ்ணவ போக்யலிப்ஸயாவா”; இத்தால் “விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ:” என்றும், “தேனே மலரும் திருப்பாதம்” என்றும் சொல்லக் கேட்டிருக்கையாலே திருவடிகளின் போக்யதை தன்னைப் பரீக்ஷிக்கைக்காக, பருவத்துக்கு அநுகுணமான வ்யாபாரம் செய்வாரைப்போலே செய்தானாதல்; “வையமேழும் கண்டாள்” என்னும்படி திருவயிற்றில் கிடக்கிற லோகங்களுக்குச் சிறைச்சோறாக்கினானாதல். மாமுனிகள் வ்யாக்யானம் - (பாதக்கமலங்கள் காணீரே) இப்படி இருந்துள்ள திருவடித்தாமரைகளை வந்து காணுங்கோள். கமலம் என்கையாலே திருவடிகளிலுண்டான நிறத்தையும், சைத்ய மார்தவ ஸௌரப்யாதிகளையும் சொல்லுகிறது. (பவளவாயீர் வந்து காணீரே) பவளம்போலே சிவந்த அதரத்தையுடையீர் வந்து காணுங்கோளென்று, யசோதைப்பிராட்டி, தான் அநுபவித்த அம்சத்தை ஸஜாதீயைகளாய் அநுபுபூஷுக்களா யிருப்பாரையும் ச்லாகித்துக் கொண்டு அழைத்துக் காட்டின பாசுரத்தாலே அருளிச்செய்தாராய்த்து.

– (சீதக்கடல் உள் அமுது அன்ன தேவகி) – ஆழமானது என்பதால், எப்போதும் குளிர்ச்சி மாறாதபடி உள்ள கடலிலே, திருவாய்மொழி (6-1-2) - விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது - என்று தேவர்கள் சுவைத்து அனுபவிக்கப் பிறந்த அமிர்தத்தின் சாரமாக உள்ள மக்ஷாலக்ஷ்மியைப் போன்ற தேவகிப்பிராட்டி. அதாவது, மக்ஷாலக்ஷ்மி எவ்விதம் சீலத்தால் பிறருக்கு உதவி செய்கிறாளோ, அதே போன்று தேவகியும் தான் க்ருஷ்ணனை அனுபவிக்காமல், திருஆயர்ப்பாடியில் உள்ள அனைவருக்கும் தன் பிள்ளையை அளித்து உதவி செய்தவள் ஆவாள். (கோதைக்குழலால் அசோதைக்குப் போத்தந்த) - பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட யசோதைப்பிராட்டியிடம் வரவிட்ட. (பேதைக்குழவி) இளம்பிள்ளையாக, பருவத்திற்குத் தக்க அறிவு இல்லாத குழந்தை. (பிடித்துச் சுவைத்து உண்ணும்) - திருக்கையாலே திருவடியைப் பிடித்து, தன்னுடைய திருப்பவளவாயில் வைத்து சுவைத்து உண்ணும். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-54) - வடதலம் அதிசய்ய ரங்கதாமந் சயித இவ அர்ணவதர்ணக: பதாப்ஜம் அதிமுகம் உதரே ஜகந்தி மாதும் நிததித வைஷ்ணவ போக்ய லிப்ஸயா வா - திருவரங்கனே! அழகாக சயனித்துள்ள கடலின் குட்டியோ என்று காண்பவர்கள் வியக்கும்வண்ணம் ஆலிலை மீது சயனித்து, தாமரை போன்ற சிறிய திருவடிகளை, திருஉதடுகளில் வைத்தபடி இருந்தாய். இதன் காரணம் என்ன? உனது திருவயிற்றில் உள்ளடக்கிய உலகங்களை மீண்டும் அளப்பதற்காகவா (அல்லது) ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிகவும் மதுரமாக உள்ள உனது திருவடிகளின் இனிமையை சுவைக்க வேண்டும் என்பதற்காகவா? – என்பது காண்க. இவ்விதம் சுவைப்பதன் மூலம், புருஷஸூக்தம் - விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: - விஷ்ணுவின் பரமபதத்தில் அமிர்தம் போன்ற மகிழ்ச்சி உள்ளது – என்றும், திருவாய்யொழி (1-5-5) - தேனே மலரும் திருப்பாதம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, “இப்படி நம்முடைய திருவடியானது அவ்வளவு இனிமையாக உள்ளதா? எங்கே பரீட்சை செய்து பார்ப்போம்” என்று தன்னுடைய திருப்பவளவாயில் வைத்து சுவைத்து, தனது வயதிற்கு ஏற்ற குறும்பினைச் செய்து உண்டு. அதாவது, எவ்வாறு சிறையுள் உள்ளவர்களுக்கு உணவு அளிப்பார்களோ, அதனைப் போன்று, பெரியாழ்வார் திருமொழி (1-1-6) - வையம் ஏழும் கண்டாள் - என்று திருவயிற்றில் இருக்கிற உலகங்களுக்கெல்லாம் தன் திருவடிகளில் தேனைச் சொரிந்து இனிமையை அளிக்கிறான். (பாதக்கமலங்கள் காணீரே) - இப்படியாக உள்ள தாமரைத் திருவடிகளை வந்து காணுங்கள். கமலம் என்பதன் மூலம், திருவடியில் உண்டாகியுள்ள நிறத்தையும், சைதந்யத்தையும், மென்மையான தன்மையையும், எளிமைத் தன்மையையும் கூறினார். (பவளவாயீர் வந்து காணீரே) – “பவளம் போல் சிவந்த இதழ்களை உடைய பெண்களே வந்து காணுங்கள்” என்று யசோதைப்பிராட்டி, தான் அனுபவித்த அம்சத்தை, தன்னைப் போன்று அன்பு கூடியவர்களாகவும், அனுபவிக்க விரும்புபவர்களாகவும் உள்ளவர்களைக் கொண்டாடிக் கொண்டு அழைத்துக் காண்பிக்கிறாள்.