பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (pravesam 1)

முதல்பத்து

ப்ரவேசம் - இரண்டாம் திருமொழி

சீதக்கடல் ப்ரவேசம்

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - கீழ்த்திருமொழியிலே “திருக்கோட்டியூர் கண்ணன் சேசவன் நம்பி பிறந்தினில்” என்று தொடங்கி, “திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை” என்று அவதார வ்யாபாரத்தையெல்லாம் அநுபவ பூர்வகமாக வருளிச் செய்தார். இனிமேல் திருவடிகளில் நின்றும் திருமுடியளவாக அநுபவித்து அநுபவித்த ப்ரகாரத்தை யசோதைப்பிராட்டி பாசுரத்தாலே விருப்பம் தோற்றவருளிச் செய்கிறார். மாமுனிகள் வ்யாக்யானம் - கீழில் திருமொழியிலே, “திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்” என்று தொடங்கி, “திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை” என்று தலைக்கட்டுகையாலே திருவவதரித்தருளின ப்ரகாரத்தை தத்காலோபலாளநங்களோடே அநுபவித்து ஹ்ருஷ்டரா யருளிச்செய்தார்; இனிமேல், இப்படி திருவவதரித்தருளினவனுடைய திவ்ய விக்ரஹ வைலக்ஷண்யத்தை தத்காலத்தில் யசோதைப்பிராட்டி அநுபவித்தாப்போலே தத்பாவ யுக்தராய்க் கொண்டு திருவடிகளில் நின்றும் திருமுடியளவாக அநுபவித்து, அநுபவித்த ப்ரகாரத்தை, அப்போது அவள் பேசின பாசுரத்தாலே ஆதரம் தோற்ற அருளிச்செய்கிறார்.

முதல் திருமொழியில், பெரியாழ்வார் திருமொழி (1-1-1) - திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் - என்று தொடங்கி, பெரியாழ்வார் திருமொழி (1-1-1) - திருக்கோட்டியுர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை - என்று நிறைவு செய்தார். இப்படி திருஅவதாரம் செய்த விதத்தை, அந்நாளில் நிகழும் ஆயர்களின் குலாவல்களோடு அனுபவித்து மகிழ்ந்து அருளிச்செய்தார். இந்தப் பத்தில், திருஅவதாரம் செய்தவனுடைய திவ்யமான வடிவிற்கே உரிய தனித்தன்மைகளை யசோதைப்பிராட்டி, அந்நாளில் அனுபவித்ததை, தானும் அந்தப் பாவனையோடு அனுபவிக்கிறார். இவ்வாறு திருவடி தொடங்கி திருமுடி வரை அனுபவித்து, தான் அனுபவித்த விதத்தை, அந்நாளில் யசோதை பேசியவாறே, ப்ரீதி தோன்ற இப்பத்தினை அருளிச்செய்கிறார்.