திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 11)

ஆறாம்பத்து

எட்டாம் திருவாய்மொழி

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல் நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே

– மேன்மையான சொற்களை நன்கு ஆராய்ந்து எடுத்துக் கொண்டு, ஞானத்திற்குக் காரணமாக விளங்கும் வேதங்களை அபகரித்த மது என்ற அஸுரனை அழித்த உபகாரகனின் திருவடிகள் விஷயமாக; பரிமளம் நிறைந்த மலர்கள் கொண்ட பொழில்கள் சூழ்ந்த ஆழ்வார்திருநகரிக்கு நிர்வாஹகரும், வேதங்களுக்குத் தவறாகப் பொருள் கூறுபவர்களை வீழ்த்துபவரும் ஆகிய நம்மாழ்வார் அருளிச்செய்ததாகிய; பகவான் தோன்றுவது போன்று வேதங்களுடைய வெளிப்படுதலாக உள்ள ஆயிரம் திருவாய்மொழிகளில், இவற்றைப் போன்று மற்றொன்று இல்லை என்று கூறலாம்படியாக உள்ள இந்த பத்துப்பாசுரங்களை, இவற்றுக்கான பாவனையுடன் கற்கவல்லவர்கள், நீர் ஊறியபடி உள்ள ஊற்றில் காணப்படும் நுண்ணிய மணல் போன்று நீராக உருகுவர்.

நிகமத்தில், இத்திருவாய்மொழியில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அநுஸந்தித்தார் சிதிலராவ ரென்கிறார்.

இறுதியாக, “இந்தத் திருவாய்மொழியில் காணப்படும் நம்மாழ்வாருடைய பிரிவாற்றாமை துக்கத்தை எண்ண வல்லவர்கள், தாங்களும் உருகி நிற்பார்கள்”, என்கிறார்.

– (மாற்றங்களாய்ந்து கொண்டு) சுரமேறுவாரைப்போலே, பக்தி பரவசராயிருப்பார்க்கு அடைவுபடப் பாசுரமிட்டுச் சொல்லப் போகாதிறே; இவ்வளவிலும் சொற்கள் நேர்பட்டபடி; நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டு. (மதுசூதபிரானடி மேல்) விரோதி நிரஸநமே ஸ்வபாவமாகவுடையவன் திருவடிகளிலே. (நாற்றங் கொளித்யாதி) “ரஹஸ்ய ஸ்த்தலத்திலே ஆள் விடுகையினாலே வரவு தப்பாது” என்று இவர் தரித்தவாறே, சோலைகளும் நித்ய வஸந்தமானபடி. பரிமளோத்தரமான பூவையுடைத்தான பொழில்கள் சூழ்ந்த திருநகரி. (தோற்றங்க ளாயிரம்) “மந: பூர்வோவாகுத்தர:” என்கிற அடைவால் சொன்னவையல்ல. இவர் கலங்கிச் சொல்லச் செய்தேயும், பகவதவதாரம்போலே ஆவிர்ப்பவித்தன. தோற்றம் - ஆவிர்ப்பாவம். மந்த்ரங்களை ருஷிகள் காணுமாபோலே. “சொற்பணி செய் ஆயிரம்” என்று, “ஆழ்வாருடைய வாக்கிலே புக்கு அங்கிட்டுப் பிறந்து நாம் சுத்தராயடிமை செய்யவேணும்” என்று அச் சொற்கள்தாம் “என்னைக் கொள், என்னைக் கொள்” என்று வந்து அடிமை செய்கிறபடி, அவைதிகர் வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதிறே சொற்களுக்கு. “போய பிழையும் புகுதருவானின்றனவும் தீயினிற்றூசாகும்” என்கிறபடியே, ஆழ்வார் வாக்கிலே பிறக்கையாலே முன்புள்ள தோஷமும் பின்புள்ள தோஷமும் தீர்ந்தது காணும் சப்தத்துக்கு. (ஊற்றின் கணித்யாதி) இவை அப்யஸிக்கப் படாதன என்கிறார். அதாவது, என் ஆர்த்த த்வநியைக் காட்டி நாட்டையடைய அழித்தே னென்கிறார். இவர் க்லேசம் அவன் முகங்காட்டத் தீரும்; இப்பாசுரம் நித்யமாகையாலே, கேட்டார் தரிக்கமாட்டார்; ஊற்றிடத்திலுண்டான நுண்ணிய மணல்போலே சிதிலாந்த:கரணராய் நீராயுருகா நிற்பர். இதுக்கு பலமாய்ச் சொல்லிற்றாயிற்றென்? என்னில்; பகவத் குண வித்தர் பாசுரங் கேட்டழிகையும் ப்ராப்யாந்தர்க்கதமாகையாலே இதுதானே பலமென்கிறது.

– (மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு) - மலை ஏறுபவர்கள் போன்று, பக்தி பரவசத்தில் உள்ளவர்கள் நிலையை ஒரு சில சொற்கள் கொண்டு கூற முடியாது அல்லவோ? “சொல்லப் போகாது அன்றோ – கூற இயலாது அல்லவோ” என்று கூறிய பின்னர் “மாற்றங்கள் ஆராய்ந்து” என்பது ஏன் என்பதற்கு “இவ்வளவிலும்” என்று தொடங்கி விடை கூறுகிறார்; இந்த நிலையிலும் அவனைக் குறித்த நினைவு மாறாமல் உள்ளதால், சொற்கள் சீரிய முறையில் உள்ளன. சிறந்த சொற்களை அறிந்து. (மதுசூதபிரானடி மேல்) - “மதுசூதனன்” என்று இந்தத் திருநாமம் கொண்டு அறியவல்லவன் என்பதால், “விரோதிகளை அழிப்பதையே தனது அடையாளமாகக் கொண்டவன்” என்கிறார். இப்படிப்பட்ட இயல்பு கொண்டவன் திருவடிகள் மீது. – (நாற்றங் கொளித்யாதி) - ஆனால் இவர் உள்ள இடம் பரிமளம் நிறைந்த மலர்கள் கொண்டு பூம்பொழிலாக இருக்குமோ என்பதற்கு விடை தருகிறார்; “அவனும் அவளுமாக, தனியாக உள்ள இடத்திற்குத் தூது விடுவதால், அவன் வருகை தவறாது”, என்று இவர் உயிர் தங்கியதால், இவர் உள்ள இடத்தில் காணப்படும் சோலைகளும் எப்போதும் வசந்த காலம் போன்றே இருந்தன. பரிமளம் நிறைந்த மலர்கள் கொண்ட பொழில்களால் சூழப்பட்ட ஆழ்வார்திருநகரி. (தோற்றங்கள் ஆயிரம்) – “மந: பூர்வோவாகுத்தர: - மனம் முன்பாகவும், சொற்கள் பின்பாகவும்” என்பதாக உள்ள முறையில் இவர் கூறவில்லை. அதாவது இவர் உள்ளம் கலங்கிக் கூறியபோதிலும், அவை பகவத் அவதாரம் போன்று, தாமாகவே வெளிப்பட்டன. தோற்றம் என்பது ஆவிர்ப்பாவம். – “தாமாகவே அவதாரம் போன்று வெளிப்பட்டன” என்றால், “ஆழ்வார் சொன்ன” என்று கூறுவது எப்படி என்பதற்கு விடை அளிகிறார்; முன்பே உள்ள மந்த்ரங்களை அந்தந்த ரிக்ஷிகள் கண்டு கூறுவது போன்று ஆகும். “மனம் முன்பாகவும், சொற்கள் பின்பாகவும்” என்று கூறியதை விளக்குகிறார். திருவாய்மொழி ( 1-10-11) – சொற்பணி செய் ஆயிரம் - என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்து சொற்களும், “ஆழ்வாருடைய திருவாக்கில் நாம் புகுந்து, அங்கிருந்து பிறந்து, தூய்மையை அடைந்து, கைங்கர்யம் செய்யவேண்டும்” என்பதாகத் தீர்மானித்து, “என்னை இடுவீராக, என்னை இடுவீராக” என்று வந்து கைங்கர்யம் செய்தன. ஆழ்வாருடைய திருவாக்கிலிருந்து சொற்கள் வந்ததால், அவற்றுக்கு உள்ள ஏற்றம் என்ன என்பதைக் கூறுகிறார்; பேதங்களுக்கு முரணாக உரைப்பவர்களுடைய வாக்கில் நின்ற தோஷம், அவற்றுக்கு நீங்கின. இப்போது அவற்றில் தோஷம் நீங்கினாலும், மேல் உள்ள தோஷங்கள் என்னவாகும் என்பதற்கு விடை தருகிறார்; திருப்பாவை (5) - போய பிழையும் புகுதருவானின்றனவும் தீயினிற்றூசாகும் – என்பதற்கு ஏற்ப, ஆழ்வாருடைய திருவாக்கில் பிறந்த காரணத்தால், இந்தச் சொற்களுடைய முன்பிருந்த தோஷம் மற்றும் வரவுள்ள தோஷம் ஆகிய அனைத்தும் இல்லாமல் போயின. (ஊற்றின் கணித்யாதி) - இந்தப் புலம்பல் ஒலிகள் இதுவரை கற்கப்படாதவை ஆகும் என்கிறார். அதாவது, “எனது துயரம் நிறைந்த சொற்கள் மூலம் இந்த நாட்டினை முழுவதுமாக துன்பத்தில் ஆழ்த்தி அழித்தேன்”, என்கிறார். இவருடைய துன்பமானது அவன் தனது திருமுகத்தைக் காண்பித்தால் தீரும். இந்தப் புலம்பல்கள், அவன் தனது திருமுகத்தைக் காண்பிக்கும் நாள் முடிய நித்யமாகத் தொடர்வதால், இதனைக் கேட்பவர்கள் தாங்கமாட்டார்கள். ஊற்றில் உண்டான நுண்ணிய மணல் போன்று உருகும் மனம் கொண்டவர்களாக, நீராய் உருகி நிற்பார்கள். இதற்குப் பலனாகக் கூறப்பட்டது என்ன? பகவானுடைய குணங்களில் ஈடுபட்டவர்கள், இந்தப் பாசுரம் கேட்டு தளர்ந்து அழிவதும், பேற்றிலே சென்று சேர்வதும் என்றுள்ளதால், இவையே பலன் ஆயிற்று.