திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 10)

ஆறாம்பத்து

எட்டாம் திருவாய்மொழி

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம் அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே

– எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி, இங்கு வந்து இருந்து, உங்களுடைய கண்ணிற்கு இனியதும் கொண்டாடத்தக்கதும் ஆகிய சேவல்களும் நீங்களுமாக, உங்களுடைய அனைத்து உறவினர்களும், ஒன்றாகத் திரள்வதற்கு எந்தவிதமான தடையும் இன்றி, இங்குள்ள மலர்களின் மீது உலவியபடி உள்ள அன்னங்களே! என்னைப் போன்று பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு ஸ்வாமிநியான மஹாலக்ஷ்மியைத் தனது திருமார்பில் கொண்டவனிடம், “இவள் இவ்விதம் ஆனாள். இவள் நிலையைக் காண்பாயாக” என்று எனது நிலையை, அவனும் அவளுமாகத் தனியாக உள்ள சேர்த்தி நிலையில் அறிவித்து, அவன் அருளிச்செய்யும் பதிலை என்னிடம் கூறுங்கள்.

சில ஹம்ஸ மிதுநங்களைக் குறித்து, பிராட்டியுந்தானுமான ஏகாந்தத்திலே என் தசையை விண்ணப்பஞ் செய்து மறுமாற்றம் வந்து சொல்லவேணுமென்கிறாள்.

ஆணும் பெண்ணுமாகக் கூடியுள்ள சில அன்னங்களை நோக்கி, “அவனும் அவளும் தனியாக உள்ளபோது எனது நிலையை உணர்த்தி, மறுமொழி கொண்டு வந்து உரைக்கவேண்டும்”, என்கிறாள்.

(வந்திருந்து) இதென்ன ஆபத்ஸகத்வந்தான்! உங்களுடைய ஸௌஹார்த்தம் இருந்தபடியென்தான்! இளையபெருமாளை இடுவித்து வெதுப்பி யழைப்பிக்க வேண்டாதிருக்கை. (வந்திருந்து) மஹாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக் கொண்டு சென்று தீர்த்தாற் போலே என்னார்த்திக்கெல்லாம் உடன் கேடராயிருந்து. (உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்) பரமபதத்தில் ஸ்த்ரீபுமான்களா யிருந்தாலும் அடிமைக்கு உறுப்பாயிருக்குமா போலே, இவற்றினுடைய இந்த பேதமும் தனக்குக் கார்யத்துக்கு உடல் என்றிருக்கிறாள். (மணிச்சேவல்) இதுவும் ஒரு சேவலேதான்! தன்னுடைய மணிச்சேவல், கடக்கவிருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறியழியாதேயிறே இருக்கிறது. (எல்லாம்) “ஸ புத்ர பௌத்ரஸ்ஸகண” என்னுமாபோலே; பார்யா புத்ராதிகளோடே கூடப் பிறர் காரியஞ் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப்போலே. (அந்தரமொன்றுமின்றி) என்னைப் போலே பிரிவோடே வ்யாப்தமான கலவியன்றிக்கே யிருக்கப் பெறுவதே. ஸம்ச்லேஷ வர்த்தகமான விச்லேஷமுமின்றிக்கே. (அலர்மேலசையுமன்னங்காள்) மிதுநமாயிருப்பார்க்குப் பூவிலும் கால் வைக்கலா மாகாதே. பூவிலே கால் பொருந்தும்படியான செருக்கன்றோ உங்களது; குறைவற்றா யிருக்கும்படி யிதுவாகாதே. (என் திருமார்வற்கு) எனக்கு அங்கு ஓரடியில்லாமை நான் மிறுக்குப்படுகிறேனோ? “ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்த்தம்” என்று, சொன்ன வார்த்தை விலை போமவள் ஸந்நிதியிலே சொல்லுங்கோள்; நான் பற்றினவடைவே பற்றுங்கோ ளென்கிறாள். (என்னையின்னவாறிவள் காண்மினென்று) பேச்சுக்கு நிலமன்று போலே. (என்னை) அச்சேர்த்தியிலே யடிமை செய்ய ஆசைப்பட்ட என்னை. இப்படி துர்க்கதையானால் இவளென்று “இவள் வைவர்ண்யத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை” என்று சீயர் அருளிச்செய்வர். அன்றிக்கே, உம்முடைய தேவாரமோ! இவள் அந்த:புர பரிகரமன்றோ வென்னுங்கோள். அர்ச்சை – அர்ச்சக பராதீநையிறே. (மந்திரத்தொன்றுணர்த்தி) ஓலக்கத்திற் சொல்லாதே கொள்ளுங்கோள்; “வத்யதாம்” என்பார் இருக்கவுங்கூடும். அவள் சொல்லே ஜீவிக்குமிடத்தே சொல்லுங்கோள். (உரையீர் மறுமாற்றங்களே) அவன் க்ரம ப்ராப்தி தோற்ற வார்த்தை சொல்லவும், அதுதான் ஒண்ணாதென்று “ந கச்சிந்நாபராத்யதி” என்று த்வரிப்பித்துக் கொண்டு வருவார் முன்னே சொல்லுங்கோள். (மந்திரம்) ப்ரணவம். (ஒன்று) அதில் மத்யம பதம்; அதிற் சொல்லுகிறபடியே அநந்யார்ஹதையை விண்ணப்பஞ் செய்து. (உரையீர் மறுமாற்றங்களே) பூர்வாபராதத்தைப் பார்த்து அவன் சொல்லும் வார்த்தைகளையும், ஸம்பந்தத்தையும் நம் தசையையும் பற்ற அவள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்டு வந்து சொல்லுங்கோ ளென்கிறாள்.

– (வந்து இருந்து) - இது என்ன நீங்கள் எனது ஆபத்திற்கு உதவும் நிலைதான் உள்ளது! உங்களுடைய நல்ல எண்ணம் எத்தகையது! இதன் மூலம், இவள் அழைக்காமல் உள்ளபோதிலும் வந்து உதவும் தன்மையும், அதற்கு ஆதாரமாக உள்ள நல்ல எண்ணமும் கூறப்பட்டது. அதாவது ஸுக்ரீவனை இலக்ஷ்மணன் மூலமாக அச்சுறுத்தி அழைத்தது போன்று அழைக்கவேண்டாதபடியாக, தாமாகவே வந்த தன்மை. (வந்து இருந்து) - அந்த அன்னங்கள் தாங்களாகவே வந்தமைக்கு உதாரணம் கூறுகிறார்; ஸுக்ரீவனுடைய துன்பத்தை இராமன் கேட்டு அறிந்து சென்று, அதனை விலக்கியது போன்று, எனது துயரத்திற்கு உடன் நிற்பவர்களாக இருந்து. – (உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்) – பரமபதத்தில் ஆண்களும் பெண்களும் என்று உள்ளபோதிலும் பகவத் கார்யத்திற்கு ஏற்றபடி இருப்பது போன்று, இந்த அன்னங்களுடைய ஆண்-பெண் என்ற வேறுபாடு தனது கார்யத்திற்கு ஏற்றபடி உள்ளவையே என்று உள்ளாள். (மணிச்சேவல்) – “மணிச்சேவல்” என்று வர்ணித்ததன் கருத்து, “இதுவும் ஒரு சேவலே ஆகும்” என்பதாகும். மணிச்சேவல் என்றால் அழகான சேவல். “அன்னத்திற்கு ஏற்றபடி ஒரு அழகான சேவல் உள்ளது போன்று இவளுக்கும் இல்லையோ” என்பதற்கு விடை அளிக்கிறார்; “இவளது மணிச்சேவலாகிய ஈச்வரன் இவளை விட்டு அகன்று, இவளை வெளுக்கும்படியாகச் செய்து, தான் அவ்விதம் அகலாமல் உள்ளது”, என்கிறார். (எல்லாம்) – “மணிச்சேவலும் நீரும்” என்பது கணவன் மற்றும் மனைவியைக் கூறுவதால், “எல்லாம்” என்பது புத்திரர்கள் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோரைக் குறிக்கும் என்று கொண்டு, அதற்கான ப்ரமாணம் கூறுகிறார். பாலகாண்டம் (1-99) - ஸ புத்ர பௌத்ரஸ்ஸகண - புத்திர பௌத்ர கூட்டத்துடன் - என்பது காண்க. அதாவது மனைவி மற்றும் புத்திரர்கள் முதலானோருடன் சேர்ந்து மற்றவர்களுடைய செயல்களைச் செய்ய முனைந்துள்ளவர்கள் போன்று. (அந்தரமொன்றுமின்றி) - என்னைப் போன்று பிரிவுடன் கூடிய சேர்க்கை என்பதை நீங்கள் அடையாமல் இருக்கவேண்டும். “ஒன்றும் இன்றி” என்றால் “சேர்க்கையை வளர்க்கவல்ல பிரிவு இன்றி” என்று பொருள். – (அலர்மேல் அசையும் அன்னங்காள்) - ஆணும் பெண்ணும் என்று ஜோடியாக உள்ளவர்களுக்கு அனைத்து மலர்களிலும் கால் வைக்கலாம் அல்லவோ? தாமரை மலரில் கால் வைத்து ஏறாலாம்படியாக உள்ள செருக்கு உங்களுக்கு உள்ளதே! எந்தவிதத்திலும் குறைவற்றவர்கள் உள்ள நிலை இது அல்லவோ? (என் திருமார்வற்கு) - எனக்கு அப்படி ஓர் அடி எடுத்து வைப்பதற்கு இயலாமை குறித்து நான் துன்பப்படுகிறேனோ? ஆரண்யகாண்டம் (15-6) - ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்த்தம் - ஸீதை அருகில் உள்ளபோது இராமனை நோக்கி லக்ஷ்மணன் இந்தச் சொற்களைக் கூறினான் - என்பதற்கு ஏற்ப நீங்கள் கூறும் சொற்களை, அவள் முன்பாகக் கூறுவீர்களாக. “என்” என்பதை “திரு” என்பதுடன் சேர்த்துக் கொண்டு பொருள் கூறுகிறார்; அதாவது, திருவாய்மொழி (1-3-1) – மலர் மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் - என்றும், திருவாய்மொழி (1-3-8) - நம் திருவுடை அடிகள் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, நான் பற்றிய விதத்தில் நீங்களும் பற்றுவீர்களாக என்கிறாள். “உம்முடைய மணிச்சேவல்” என்று உங்களைப் புருஷகாரமாகக் கொண்டு சேவலை நான் பற்றியவிதத்தில் நீங்களும் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு, அவனைப் பற்றுவீர்களாக என்கிறாள். – (என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று) – “இன்னவாறு” என்று ஏன் கூறவேண்டும், இவளுடைய நிலையை கொண்டு உரைக்க இயலாதோ என்பதற்கு விடை அளிக்கிறார்; இவளுடைய நிலையானது சொற்களில் அடங்குவதல்ல. (என்னை) - அந்தச் சேர்த்தியில் கைங்கர்யம் செய்ய விரும்பியபடி உள்ள என்னை. இவ்விதம் இவள் துன்பமான நிலையை அடைந்தாள் என்பதை, “இந்த அன்னங்கள் அவனிடம் சென்று இவளுடைய பசலை நிறத்தைத் தங்ளுடைய உடம்பில் காட்டவும் முடிந்தபடி இருந்தன” என்று நஞ்சீயர் அருளிச்செய்தார்; இதனால்தான் பாசுரத்தில் “கேண்மின்” என்று கூறப்படாமல், “காண்மின்” என்றார்; அதாவது இந்த அன்னங்கள் வெளுத்துள்ளதால், இவ்விதம் வெளுத்த விதத்தை இவளும் அடைந்தாள் என்று கருத்து . – அல்லது பெரியபிராட்டியாரின் பரிகரமாக உள்ள தன்மை என்ற விதத்தையும் இவள் கொண்டாள் என்று மூன்றாவதாக ஒரு கருத்தையும் அருளிச்செய்கிறார். உம்முடைய தேவாரமோ! தேவாரம் என்றால் வீடுகளில் ஆராதிக்கும் ஸர்வேச்வரனுடைய திருமேனி விக்ரஹம். அதாவது அர்ச்சாவதாரமாக உள்ள உனக்கு அந்த ரூபம் உன் வசப்பட்டதோ? இவள் உனது அந்தப்புரத்தில் உள்ள பெண்களைச் சேர்ந்தவள் அல்லவோ? அர்ச்சை என்பது அர்ச்சகருக்கு வசப்பட்ட திருமேனி. (மந்திரத்து ஒன்று உணர்த்தி) - அவன் சபையில் உள்ளபோது கூறாமல், பெரியபிராட்டியுடன் தனித்து உள்ளபோது கூறுவீர்களாக. யுத்தகாண்டம் (17-27) - வத்யதாம் – விபீஷணனை நோக்கி ஸுக்ரீவன், “இவன் சொல்லத்தக்கவன்” என்றான் - என்பது போன்றவர்கள் அந்தச் சபையில் இருக்கக்கூடும். அல்லது “மந்திரித்து” என்பதற்கு “சபை அல்லாமல், தனியான இடம்” என்று பொருள் கூறினார்; இனி “இன்ப நிலையில்” என்று பொருள் அருளிச்செய்கிறார்; தனியான இடம் என்றால் கூட அவன் மறுக்க வாய்ப்பு உள்ளது; ஆகவே இன்பநிலையில் உள்ளபோது, அவள் கவனித்துக் கேட்கவில்லை என்றாலும், அவன் விரும்பிக் கேட்பான்; ஆகவே அவளுடைய சொற்களை அவன் கேட்கும் இடத்திற்குச் சென்று கூறுங்கள் என்கிறாள். (உரையீர் மறுமாற்றங்களே) - அவன் இங்கு முறையாக வரும்விதமாக அவனிடம் நீங்கள் கூறுவீர்களாக. அந்தச் சொற்களையும் கூட, யுத்தகாண்டம் (116-44) - ந கச்சிந்நாபராத்யதி - தவறு செய்யாதவர்கள் யார் உள்ளனர் - என்று விரைந்து வந்து காப்பாற்றுபவள் முன்பாகவே கூறுவீர்களாக. (மந்திரம்) “மந்திரம்” என்பதற்கு “ப்ரணவம்” என்று பொருள் கொள்கிறார். (ஒன்று) - ப்ரணவத்தில் உள்ள நடுப்பதம் “உ”, இது பெரியபிராட்டியார். அதில் கூறப்பட்டபடி வேறு யாருக்கும் வசப்படாத நிலையை அவனிடம் விண்ணப்பம் செய்து. (உரையீர் மறுமாற்றங்களே) - முன்பு செய்த குற்றங்களையும் பார்த்து அவள் கூறும் சொற்களையும், நமக்கும் அவனுக்கும் உள்ள ஸம்பந்தத்தையும், நமது நிலையையும் நோக்கி, அவள் கூறும் சொற்களையும் கேட்டு வந்து என்னிடம் கூறுவீர்களாக.