திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 9)

ஆறாம்பத்து

எட்டாம் திருவாய்மொழி

பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே

நீரில் உள்ள அலைகளின் நீரானது மேலே படாதபடி அவற்றின் மீது ஸஞ்சரித்து இரையைத் தேடும் பெருநாரைக் கூட்டங்களே! எனக்கு உதவ வேண்டியவனால் உதவப்படாமல் இருப்பதற்கான பாபம் செய்த நான், உங்களை அல்லாமல், வேறு ஒரு காப்பாற்றும் வஸ்துவைக் கொண்டவள் அல்லள். ஆகவே, மழைக்காலத்தில் திரண்டுள்ள பெரிய மேகங்கள் போன்ற நிறம் கொண்டவனும், அப்படிப்பட்ட வடிவழகைப் பரமபதத்தில் உள்ளவர்களும் அனுபவிக்கும்படியாக உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை நீங்கள் கண்டு, அவன் என் விஷயமாக உங்களிடம் அருளிச்செய்யும் சொற்களைக் கேட்டு, என்னிடம் க்ருபை செய்து, அந்தச் சொற்களை என்னிடம் வந்து இருந்து, அதனையே நான் பொழுதுபோக்காகக் கொள்ளும்படியாக உரைத்தபடி இருப்பீர்களாக.

சில புதாவினங்களைக் குறித்து, நீங்கள் சென்றால் அவன் வந்திலனாகிலும் அங்குத்தை வார்த்தையைக் கொண்டு வந்து என்னை நித்யமாக உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்கிறாள்.

ஒரு சில நாரைகளைக் குறித்து, “நீங்கள் அங்கு சென்றால், அவன் இங்கு வரவில்லை என்றாலும், அங்கு அவன் கூறும் சொற்களைக் கேட்டுக் கொண்டு வந்து என்னை எப்போதும் பிழைத்திருக்கும்படிச் செய்யவேண்டும்”, என்கிறாள்.

(பேர்த்து மற்றோர்களை கண் வினையாட்டியேன் நானொன்றிலேன்) தன் பரிகரங்களிலே யொன்றைக் கொண்டு போது போக்குகிறாள் என்னுமளவுங் குலைந்தது. வெறுமையை முன்னிடுமத்தனையிறே ததீயர் பக்கலிலும். உங்களையொழிய வேறொரு ரக்ஷகரை யுடையே னல்லேன். (மற்றோர் களைகண்) பிராட்டிக்கு லங்கைக்குள்ளே ஒரு த்ரிஜடையாகிலு முண்டாயிற்று; காட்டிலே விட்டுப் போந்த தனிமையிலே ஒரு வால்மீகி பகவானாகி முண்டாயிற்று; பர்த்தா பொகட்டால் ஒரு பிதாவாகிலுமுண்டாக வேணுமிறே. (வினையாட்டியேன்) நாயகந்தானே ரக்ஷகனுமா யிருக்குமிறே; அப்படிப்பட்டவன் கைவிட்டுப் போம்படியான பாபத்தைப் பண்ணினேன். (நீர்த்திரை மேலுலவி) ஆவரண ஜலம், விரஜை இவையெல்லாம் கடந்தேற வற்றா யிருக்கை. (உலவி) நிலத்திலே சஞ்சரிக்கிறாப்போலே நீரிலே சஞ்சரிக்கிறபடி. (இரை தேரும்) இவற்றின் நடையோடொக்க இதுவுமொரு பௌஷ்கல்யமிறே இவளுக்கு. நான் உபவாஸ க்ருசையா யிருக்க, உங்களுக்கு மிடற்றுக்குக் கீழிழியாதிறே; என்னையும் உங்களைப்போலே யாக்கினாலன்றோ ஜீவித்ததாவது? (புதா) பெருநாரை. (கார்த்திரள் மாமுகில் போல்கண்ணன்) எல்லா விடாயும் ஆறுங்கிடீர் அவ்வடிவைக் காணப்பெறில்! இவள் கண்ணுக்குக். கறுப்பாயிருக்கிறதிறே. கறுப்பெல்லாம் திரண்டாற் போலேயிருக்கிற மஹாமேகம் போன்ற வடிவையுடையவன்; கார்காலத்தில் திரண்ட மஹாமேகமென்றுமாம். (மாமுகில்) மாறாதே கொடுக்கவல்ல முகில். (கண்ணன்) அவ்வடிவுபோலும் அல்லகிடீர் அகவாயில் தண்ணளி யிருக்கும்படி. (விண்ணவர் கோனைக் கண்டு) விடாய்த்தாரிருக்க, மீனுக்குத் தண்ணீர் வார்த்திருக்கிறவனை. பிரிகைக்கு ஸம்பாவநை யில்லாதார்க்குத் தன்னைக் கொடுத்துக்கொடு நிற்கிறவனைக் கண்டு. (வார்த்தைகள் கொண்டு) வந்திலனாகிலும், சில வார்த்தைகள் சொல்லக் கடவனிறே. காட்சிக்குமேலே வார்த்தையுங் கேட்க இறே நீங்கள் புகுகிறது. “பாவி நீயென்றொன்று சொல்லாய்” என்னுமவரிறே. இப்போது இவர்க்கு “மாட்டேன்” என்னும் வார்த்தையும் அமையும். வார்த்தை கேட்கைக்கும் முடியப் போய்த் திரியவோ? என்னில்; (வார்த்தைகள் கொண்டருளி - வந்திருந்து - வைகலும் உரையீர்) ஒருகால் போய் அவன் வார்த்தையைக் கேட்டு என் பக்கலிலே க்ருபையைப் பண்ணி வந்திருந்து, அத்தை எனக்கு எப்போதுஞ் சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்! அன்றிக்கே, விண்ணவர்கோனான கண்ணனைக் கண்டு, வார்த்தைகள் கொண்டு, “மாசுச:” என்று பலத்தோடே வ்யாப்தமான வார்த்தைகளைக் கொண்டு, என் பக்கலிலே க்ருபையைப் பண்ணி வந்திருந்து வைகலுமுரையீர் என்றுமாம்.

(பேர்த்து மற்றோர்களை கண் வினையாட்டியேன் நானொன்றிலேன்) - தனது பரிகரங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பொழுது போக்கிக் கொள்கிறாள் என்ற நிலையும் அகன்றது. அல்லது, “உங்களை அல்லாமல் எனக்கு வேறு ரக்ஷகம் இல்லை” என்று கூறுவதைக் கொண்டு, “பகவத் விஷயத்தில் அல்லவோ, இது போன்று, அவன் அல்லாமல் வேறு ரக்ஷகம் இல்லை என்று கூறவேண்டும்? ஆசார்யனாக உள்ள இந்தப் பரிகரங்கள் விஷயத்திலும் அது போன்று கூற இயலுமோ?”, என்பதற்கு விடை அருளிச் செய்கிறார்; அவர்கள் விஷயத்திலும் வெறுமையை மட்டுமே முன்னிடுகிறாள். உங்களை அல்லாமல் வேறு ரக்ஷகரை நான் கொள்ளவில்லை. (மற்றோர் களைகண்) - இங்கு “மற்று களை கண் இலேன்” என்று கூறாமல் “ஓர்” என்று ஏன் கூறினார்? இதற்கு “பிராட்டிக்கு” என்று தொடங்கும் மூன்று வாக்கியங்களில் விடை தருகிறார். ஸீதைக்கு இலங்கையில் ஒரு த்ரிஜடையாவது இருந்தாள்; ஸீதை காட்டில் தனித்து விடப்பட்டபோது ஒரு வால்மீகி பகவான் இருந்தார்; நளனால் தனித்து விடப்பட்ட தமயந்திக்கு ஒரு தந்தையாவது இருந்தார். இது போன்று இங்கும் வேண்டும் அல்லவோ? (வினையாட்டியேன்) - மற்றவர்களால் நலிவடையும்போது, கணவனால் காப்பாற்றப்படும் தன்மையைக் கூறுகிறார்; நாயகன் அல்லவோ ரக்ஷகனாக இருப்பான்! அவனும் கைவிட்டுப் போகும்படியான பாபத்தைச் செய்தேன். (நீர்த்திரை மேலுலவி) - பூமண்டலம் போன்று பலவற்றையும் சூழ்ந்து நிற்கும் ஆவரண ஜலங்கள்; பரமபதத்தின் அளவிற்கு இவள் தூது விடுவதால், இவ்விதம் அனைத்து ஆவரண ஜலங்களும் கூறப்பட்டன; விரஜா நதி போன்ற பலவற்றையும் இவை கடந்து செல்லவல்லதாக உள்ளன. (உலவி) - நிலத்தில் ஸஞ்சரிப்பது போன்று இவை நீரிலும் ஸஞ்சரித்தபடி உள்ளன. (இரை தேரும்) - இவற்றின் நடை போன்று, இவை இரை தேடுவதும் தனது கார்யத்திற்கு ஏற்ற நிலை என்று கொண்டு அருளிச்செய்கிறார்; இவற்றின் நடை போன்று இதுவும் ஒரு குறையில்லாமல் இவளுக்கு உள்ளது. இவை இரை தேடுவது தனது கார்யத்திற்குச் சாதகமாக உள்ள விதத்தைக் கூறுகிறார்; நான் உபவாசம் காரணமாக இளைத்துள்ளபோது, உங்களுக்கு கழுத்துக் கீழே உணவு இறங்காது அல்லவோ? இதனைக் கேட்ட அவை, “இப்போது நாங்கள் இரை தேடவில்லையோ? அது போன்று நீயும் செய்யலாமே!”, என்றன. இதற்கு இவள், “என்னையும் உங்களைப் போன்று ஆக்கினால் அலல்வோ நான் தரித்திருக்க இயலும்”, என்கிறாள். (புதா) - பெருநாரை. – (கார்த்திரள் மாமுகில் போல்கண்ணன்) - இப்போது ஏன் அவன் வடிவத்தைக் கூறவேண்டும் என்றால், அந்த வடிவத்தைக் காணப் பெற்றால் அனைத்து துன்பங்களும் விலகும் என்பதால் ஆகும். இவள் கண்களுக்கு அவன் வடிவம் கறுப்பாக உள்ளது; இங்கு “கறுப்பாக” என்பதற்கு, “குளிர்ச்சி” மற்றும் “பொறுக்க இயலாமை” என்பதாக இரண்டு பொருள்கள் சிலேடையாக உள்ளன. அனைத்து கறுப்பும் ஒன்றாகத் திரண்டது போன்றுள்ள பெருத்த மேகம் போன்ற வடிவம் கொண்டவன். கார்காலத்தில் திரண்ட மகாமேகம். (மாமுகில்) - மேகத்திற்கு மஹத்வம் என்னவென்றால், மாறாமல் அளிக்கவல்ல முகில் என்பதால் ஆகும். “மாமுகில்” என்றது வடிவம் அல்லது தாராள குணம். – (கண்ணன்) – “கார்த்திரள்” என்பது போன்றவற்றால் கூறப்பட்ட வடிவத்தை உரைத்த பின்னர், “கண்ணன்” என்று கூறியதன் கருத்தைக் கூறுகிறார்; இந்த வடிவம் போன்று வெளியில் மட்டும் அல்லாமல் உள்ளிலும் க்ருபை உள்ளது. (விண்ணவர் கோனைக் கண்டு) - “விண்ணவர் கோன்” என்று வெறுப்பாகக் கூறுவது ஏன் என்றால், தாகம் எடுத்தவர்கள் உள்ளபோது, மீனுக்குத் தண்ணீர் கொடுப்பவன் போன்று, பிரிவு என்பதே இல்லாத விண்ணவர்களுக்குத் தன்னையே கொடுத்தபடி நிற்பவனைக் கண்டு. (வார்த்தைகள் கொண்டு) - அவன் இங்கு வரவில்லை எனறாலும், ஒரு சில சொற்களை உங்களிடம் கூறுவான் அல்லவோ? அவனைக் காண்பது மட்டும் அல்லாமல், அவன் சொற்களைக் கேட்பதற்கும் அல்லவோ நீங்கள் அங்கு செல்கிறீர்கள்! “வருவேன்” என்பது போன்று அவன் கூறும் சொற்களை என்று கூறாமல். “சொற்களை” என்று மட்டும் கூறுவது ஏன் என்றால், திருவாய்மொழி (4-7-3) - பாவி நீயென்றொன்று சொல்லாய் - என்று இவள் கூறுவதற்கு ஏற்ப அவன் செய்பவன் அல்லவோ? அவன் “மாட்டேன்” என்று கூறினால் கூட இவளுக்கு உயிர் தரிக்கப் போதுமானது ஆகும். அவனுடைய சொற்களைக் கேட்பதே அவசியமான ஒன்று என இதனையே வாழ்வாகக் கொண்டு, அங்கும் இங்கும் சென்றபடி இருக்கவேண்டுமோ என்று நாரைகள் கேட்பதாக எண்ணி பதில் கூறுகிறாள்; (வார்த்தைகள் கொண்டருளி - வந்திருந்து - வைகலும் உரையீர்) – ஒருமுறை சென்று அவன் வார்த்தைகளைக் கேட்டு, என் பக்கம் க்ருபை செய்து, என்னிடம் வந்து, இங்கு இருந்து, அந்த வார்த்தைகளை எனக்கு எப்போதும் கூறி, என்னைப் பிழைக்க வைப்பீர்களாக; இங்கு “வார்த்தைகள்” என்பது “வாரான், வரும்” என்பது போன்றவை ஆகும். அதாவது, வானவர் தலைவனாகிய கண்ணனைக் கண்டு, அவன் கூறுவதாகிய “மாசுச: - வருந்தாதே” என்பதாக உள்ள பலனுடன் முடியும் சொற்களைக் கேட்டுக் கொண்டு, என்னிடம் நீங்கள் க்ருபை செய்து, இங்கு வந்து இருந்து, அன்றாடம் அவற்றை எனக்கு உரைத்து, என்னைப் பிழைக்க வைப்பீர்களாக.