திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 8)

ஆறாம்பத்து

எட்டாம் திருவாய்மொழி

பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள் மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு ஏசு அறும் நும்மை அல்லால் மறு நோக்கு இலள் பேர்த்து மற்றே

– பறப்பதில் குறைவு இல்லாதபடியான சிறகுகள் கொண்டதாகவும், உள்ளத்தில் இருக்கின்ற தூய்மை வெளியே புலப்படும்படி உள்ள வெண்மையான சிறகுகள் கொண்டதாகவும் உள்ள குருகே! எனது விரகத்திற்கு முடிவு காண இயலாதபடியான பாபம் கொண்ட நான், துக்கத்தால் நிறம் இழந்து, இப்படியாகவே எத்தனை கல்பகாலங்கள் தளர்ந்தபடி இருப்பேன்? ஆகவே, அழுக்கு அற்றதான நீலச்சுடர் கொண்ட தலைமுடி உள்ளவனும், நித்யஸூரிகளை ஆள்பவனும் ஆகிய ஸர்வேச்வரனை நீ கண்டு, “தோஷம் ஏதும் இல்லாத உம்மை அல்லாமல் வேறு எந்த ஒரு பொருளையும் மறித்துப் பார்ப்பதில்லை என்று உள்ளாள்” என்பதாகக் கூறவேண்டும். இப்படியாக எனக்கு நீ ஒரு நாள் உபகாரம் செய்யவேண்டும்.

முன்பே நின்ற குருகைக் குறித்து, நித்யசூரிகளைப்போலே உம்மாலல்லது செல்லாதே, உம்மைப் பிரிந்து நோவுபடாநின்றா ளென்று சொல் என்கிறாள்.

அங்கு வந்து நின்ற குருகை நோக்கி “அவனிடம் சென்று ‘நித்யஸூரிகளுக்கு நீ இல்லாமல் எவ்விதம் ஏதும் நிகழாதோ, அதனைப் போன்று உம்மால் அல்லாமல் ஏதும் நிகழாமல் உள்ளவளாக, உம்மைப் பிரிந்து நோவு பூண்டு நிற்கிறாள்’ என்று கூறுவாயாக”, என்கிறாள்.

(பாசற இத்யாதி) “இன்னம் சில காலங் கழித்தால் அறிவிக்கிறோம்” என்னுமளவா யிருந்ததோ என் தசை? (பாசறவெய்தி) பாசென்று பசுமையாய், அத்தால் நினைக்கிறது நீர்மையாய், அது அறுகையாவது வைவர்ண்யத்தோடே வ்யாப்தமாகை. (இன்னே) “எப்படி வைவர்ண்யத்தை யடைந்தது?” என்னில், என்னைக் கண்ட உங்களுக்குச் சொல்லவேண்டாவிறே. விஷயம் ஸாவதியாகிலிறே இது அளவுபட்டிருப்பது? இதுக்கு ஒரு பாசுரமிட்டுச் சொல்லப்போகாது; உடம்பைக் காட்டுமத்தனை. பாசுரமிட்டுச் சொல்லப் போகாமை, படியெடுத்துக் காட்டுகிறாள். (வினையேன்) விச்லேஷமும் ஸம்ச்லேஷத்தோபாதியாகப் பெற்றிலேன்; அது காதாசித்கதமாய், இது நித்யமாயிருக்கிறபடி. (வினையேன்) கலக்கப் பெறாவிட்டால் மீண்டு கைவாங்க வொண்ணாதபடியான பாபத்தைப் பண்ணினேன். (எனையூழி நைவேன்) - சைதில்யத்தோடே யெத்தனை கல்பம் சென்றது? முன்பு பிரிந்தார் பதினாலாண்டாதல், பத்து மாஸமாதல். (ஆசறு தூவி வெள்ளைக்குருகே) பழிப்பற்ற சிறகை யுடைத்தாய், பரது:காஸஹிஷ்ணுதைக்குஉறுப்பான மநோநைர்மல்யத்தை யுடைத்தா யிருக்கிறபடி. (வெள்ளைக்குருகே) அவன் பிரிகைக்குப் புறம்போலுள்ளும் கரியானானாற் போலேயிறே நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும்புறம்பும் நிர்மலமாயிருக்கிறபடி. (அருள் செய்தொரு நாள்) ஒருபோது க்ருபை பண்ணி. இவ்வளவில் முகங்காட்டுகையாகிற இதுக்கு மேற்பட அருளில்லையிறே; வெறும் உங்கள் க்ருபையாலே செய்திகோளத்தனையிறே. (மாசறுவித்யாதி) பழிப்பற்று நெய்த்திருந்துள்ள மயிர்முடியை யுடையனாய், அம்மயிர்முடியை நித்யசூரிகள் பேண இருக்கிறவனைக் கண்டு. ஒரு நீர்ச்சாவி கிடக்கக் கடலிலே வர்ஷிக்கிறவனைக் கண்டு. (ஏசறும்) க்லேசப்படாநின்றாளென்னுதல், நாட்டார் ஏசும் நிலை கடந்தாளென்னுதல். ஏசறுங்கோள் - வடிவைக் காட்டுங்கோளென்றுமாம். அதாகிறது, என்னுடைய வைவர்ண்யத்தை நீங்கள் உங்களுடம்பிலேயணிந்து காட்டுங்கோளென்றபடி. (நும்மையல்லால் மறுநோக்கிலள்) உம்மையொழிய வேறு குளிர்ந்த விழியில்லை. வ்ருத்த கீர்த்தநத்துக்கும் உம்மையொழிய வேறொருவரை யுடையளல்லள்; “ஸகீபிஸ் ஸுகமாஸ்வ” என்னும் நிலையுங் குலைந்தது. (நும்மையல்லால்) “வாராநின்றோம்" என்று ஸ்ரீபரதாழ்வானைப்போலே ஆள் வர விடத்தரியாது. (நும்மையல்லால்) ஸ்வரூப குணங்களை யநுஸந்தித்து தரிக்கும் அளவல்லள். (மறுநோக்கிலள்) உம்மையொழிய பந்துக்கள் நோக்கும் நிலை கழிந்தது. இப்பாட்டுக்கு க்ரியை கீழிற்பாட்டிலேயாதல், மேலிற்பாட்டிலேயாதல். தமிழர் “வினையெச்சமாய்க் கிடக்கிறது” என்று சொல்லுவார்கள். அதாவது, “மறுநோக்கிலள் பேர்த்து மற்று” என்று சொல்லுங்கோள் என்கிற இத்தனையுமிட்டுச் சொல்லவேண்டுகை.

(பாசற இத்யாதி) – “எனை ஊழி நைவேன்” என்று ஏன் கூறவேண்டும் என்பதற்குக் கருத்து அருளிச்செய்கிறார். இவளிடம் பறவைகள், “இன்னம் சிறிது காலம் கழிந்த பின்னர் உனது நிலையை அவனிடம் அறிவிக்கிறோம்” என்றன; இதற்கு இவள், “அவ்விதம் பொறுத்திருக்கும்படி என் மனம் உள்ளதோ?” என்கிறாள். எனது சரீரம் பசலை நிறம் அடைந்ததால் “மெதுவாகச் செய்கிறோம்” என்று இருக்கலாகாது என்கிறாள். (பாசறவெய்தி) - பாசு என்பது பசுமை, அதனால் எண்ணப்படுவது நீர்மை, அது அறுதல் என்பது பசலை நிறத்தோடு முடிந்து நிற்கும் நிலை. (இன்னே) - அந்தக் குருகுகள் இவளிடம், “இது போன்ற பசலை நிறம் உனக்கு எப்படி வந்தது?”, என்றதற்கு விடை கூறுகிறாள். என்னை கண்ட உங்களுக்கு இதனை நான் கூறவேண்டாம் அல்லவோ? அனுபவிக்கப்படும் விஷயத்திற்கு ஒரு எல்லை இருந்தால் அல்லவோ இதற்கு ஒரு முடிவு இருக்கும். இதனைச் சொற்கள் கொண்டு கூற இயலாது, சரீரத்தில் உணரலாம் என்று காண்பிக்கிறாள். (வினையேன்) – பிரிவையும், சேர்த்தியைப் போன்று நான் பெறவில்லை. சேர்கையானது எப்போதும் இல்லாததாகவும், பிரிவானது எப்போதும் உள்ளதாகவும் இருக்கிறது. (வினையேன்) - அவனுடன் நான் சேர இயலவில்லை என்றால், மீண்டும் அதிலிருந்து தப்ப இயலாதபடி பாபம் செய்தேன். (எனையூழி நைவேன்) - வருத்தத்துடன் எத்தனை கல்பகாலங்கள் கழிந்தன! முன்பு பிரிந்தவர்கள் பதினான்கு ஆண்டுகள் பிரிந்தனர்; அதாவது, பரதன் இராமனைப் பிரிந்தமை; அல்லது பத்து மாதம் பிரிந்தனர்; அதாவது சீதை இராமனைப் பிரிந்தமை ஆயிற்று. (ஆசறு தூவி வெள்ளைக்குருகே) - இதன் மூலம், உள்ளும் புறமும் உள்ள தூய்மையைக் கூறுகிறார். பழிப்பு அற்ற சிறகுகள் கொண்டதாக, மற்றவர்களுடைய துக்கத்தை பொறுத்துக் கொள்ள இருப்பதற்கு உறுப்பாக உள்ள மனதில் குற்றம் ஏதும் இல்லாத நன்மையைக் கொண்டிருத்தல். (வெள்ளைக்குருகே) - அவனுடைய பிரிவிற்கு, அவன் திருமேனியின் புற நிறம் போன்று கருமையாக உள்ளது காரணமாக இருக்கிறது; அது போன்று நீங்கள் அல்லாமல், சேர்த்து வைப்பதற்கு உள்ளும்புறமும் களங்கம் ஏதும் இன்றி உள்ளீர்கள். (அருள் செய்தொரு நாள்) - ஒருபோது கருணை காண்பித்து. ஆனால் அருள் நிறைந்தவர்களுக்கு மட்டுமே அல்லவோ க்ருபை செய்யும் குணம் ஏற்படும்? இந்தப் பறவைகளுக்கு அந்தக் கருணை உள்ளது என்று இவள் எப்படி அறிந்தாள் என்பதற்கு விடை அளிக்கிறார்; இந்தப் பிரிவு நேரத்தில் முகத்தைக் காண்பிப்பதைக் காட்டிலும் மேலான க்ருபை வேறு ஏதும் இல்லை. இதனை உங்களுடைய க்ருபையால் மட்டுமே நீஙகள் செய்தீர்கள். (மாசறுவித்யாதி) - எந்தவிதமான குறையும் இன்றி நெய்த்துள்ள தலைமுடியை உடையவனாக, அத்தகைய தலைக்கேசத்தை நித்யஸூரிகள் பேணியபடி உள்ளனர்; அவனை நீங்கள் கண்டு. இவள் உள்ளபோது, நித்யஸூரிகளுக்குத் திருமுகம் காண்பித்தபடி உள்ள அவனை வெறுக்கும் தன்மையில் கூறுகிறார்; மழையை எதிர்பார்த்து நிலம் உள்ளபோது, கடலில் மழை பெய்யும்படி உள்ளதைப் போன்று உள்ளவனைக் கண்டு. (ஏசறும்) - வருத்தத்தை கடந்து நிற்கிறாள். அதாவது நாட்டில் உள்ளவர்கள் கூறும் பழிசொற்களைக் கடந்து நிற்கிறாள். அல்லது “ஏசறுவாய்” என்றால் “வடிவைக் காட்டுவாய்” என்று பொருள்; ஆனால் “ஏசறுதல்” என்பது துக்கத்தைக் காண்பிக்கும் அல்லாமல், வடிவத்தைக் காண்பிக்குமோ என்பதற்கு விடை அளிக்கிறார்; எனது பசலை நிறத்தைப் பறவையாகிய நீங்கள் உங்கள் வடிவத்தில் அவனுக்குக் காண்பிப்பீர்களாக என்கிறார். (நும்மையல்லால் மறுநோக்கிலள்) - உம்மை அல்லாமல் வேறு யாருடைய கண்களும் குளிர நோக்கும் பார்வை கொண்டதில்லை. “மறுநோக்கு இலள்” என்பதற்கு நான்குவிதமான இயல்புகளைக் கூறுகிறார். நடந்தவற்றை உரைப்பதற்கு உங்களை அல்லாமல் வேறு யாரையும் கொண்டவள் அல்லள். தோழிமார்கள் இல்லையோ என்றால், “ஸகீபிஸ் ஸுகமாஸ்வ - தோழிமார்களுடன் ஸுகமாக இருப்பாயாக” என்ற நிலையும் குலைந்தது. (நும்மையல்லால்) - அடுத்த இரண்டாவது விதமான இயல்பைக் கூறுகிறார்; “வராமல் நின்றோம்” என்று ஸ்ரீபரதாழ்வான் போன்று, முன்கூட்டியே அனுமனை அனுப்பியது போன்று ஆள் விடாமல் தரியாது. (நும்மையல்லால்) - அடுத்து மூன்றாவது இயல்பைக் கூறுகிறார்; ஸ்வரூப குணங்களை எண்ணித் தரித்தபடி உள்ள அளவிற்குத் தாங்குபவள் அல்லள். (மறுநோக்கிலள்) - அடுத்து நான்காவது தன்மையைக் கூறுகிறார்; உங்களை அல்லாமல் மற்ற பந்துக்களைக் காணும் நிலையும் நீங்கியது. இந்தப் பாட்டின் முடிவு என்பதைக் கடந்த பாசுரத்தில் கொள்ள வேண்டும். தமிழர், “விளையானது எச்சமாக உள்ளது” என்பர். அதாவது, “மறு நோக்கிலள் பேர்த்து மற்று என்று கூறுங்கள்” என்கிற அனைத்தையும் சேர்த்துக் கூறவேண்டும்.