திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 7)
ஆறாம்பத்து
எட்டாம் திருவாய்மொழி
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவரும் ஆய் நின்ற மாயன் என் ஆழிப் பிரான் மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே
– பாவைகளே! காயாம்பூ போன்று காண்பதற்கு இனிமையாக உள்ள நிறத்தைக் கொண்டவனாகவும்; அதற்குச் சேரும்விதத்தில் தாமரை போன்று திருக்கண்கள் கொண்டவனாகவும்; இப்படியாக அவனுக்கே உரிய திருமேனி மட்டும் அல்லாமல், அனைத்து அசேதநங்களையும் அனைத்து சேதநங்களையும் தனது சரீரமாகக் கொண்டு அந்தந்த சரீரங்களில் நிற்பவனாகவும்; அந்தந்த சரீரங்களின் தோஷங்களிலிருந்து விலகி நிற்கும்படி, வியக்க வைக்கும் சக்தி கொண்டவன் என்பதால், அவற்றுடன் கலந்து நிற்கும்போதும் கலக்காமல் உள்ளவனாகவும்; தனது திருக்கரமும் திருச்சக்கரமும் என்றுள்ள தனது வடிவழகை எனக்குக் காண்பித்து உபகாரம் செய்பவனாகவும்; தன்னை அனுபவித்தபடி உள்ள கோபிகைகளுக்குத் தடையாக இருந்த கேசியை, அவனுடைய வாயைப் பிளந்து கிழித்தவனாகவும்; அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதையே தனது இயல்பாக உள்ளவனாகவும் இருக்கின்ற மதுசூதனனுக்கு, கிளிகளுக்கும் பறவைகளுக்கும் கூறப்பட்ட எனது சொற்களை நீங்கள் உரைத்து, உங்கள் மூலம் எனது பாபங்களை நீக்கிக் கொள்ளவல்ல நிலையில் உள்ள எனது பசலை நிறத்தைப் போக்குவீர்களோ!
– “பரமசேதநன் பொகட்டுப் போனான்; சைதந்யலேசமுள்ள பக்ஷிகள், பறந்து போவனவும் அந்யபரமாவனவுமாயிற்று; இதுக்கு ஹேது சேதங்களாகையோ?” என்று பார்த்து, அசேதநமான பாவையையிரக்கிறாள். அசேதகமுங்கூட எழுந்திருந்து கார்யஞ் செய்யவேண்டும்படி காணும் இவள் அவஸ்த்தை.
கடந்த சில பாசுரங்களில் அறிவுள்ள பறவைகளிடம் வேண்டி நின்ற இவள், இந்தப் பாசுரத்தில் அறிவற்ற பாவையை வேண்டுவது ஏன் என்பதற்கு விடை தருகிறார். ஸர்வேச்வரன் விட்டுச்சென்றான்; சிறிது அறிவுள்ள பறவைகளும் பறந்து செல்லுதல் அல்லது மற்ற செயல்களில் கவனம் கொள்ளுதல் என்பதாக இருந்தன; இதற்குக் காரணம் இவை அறிவுள்ளதாக இருப்பதால் அல்லவோ என்று சிந்தித்தாள். ஆகவே அறிவற்ற பாவையை வேண்டுகிறாள். ஆனால் அறிவற்ற வஸ்துக்கள் கார்யம் செய்ய இயலுமோ என்றால், அறிவில்லாத அந்தப் பொருள்கள் கூட எழுந்து வந்து கார்யம் செய்ய வேண்டியதாக இவள் நிலை உள்ளது என்று கருத்து.
(பூவைகள் போல் நிறத்தன்) ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன். “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்னும்படியே. பேற்றுக்குப் பாவையின் காலிலே விழும்படியான வடிவு படைத்தவன். பூவைப்பூப் போன்ற வடிவை யுடையவன். (புண்டரீகங்கள் போலுங் கண்ணன்) ஒரு பூ ஒரு பூப்பூத்தாற்போலே காணும் வடிவும் கண்ணுமிருக்கிறபடி; காயாம்பூ தாமரை பூத்தாற்போலே யிராநின்றது. சேதநாசேதந விபாகமறக் காற்கீழே விழும்படியான கண் படைத்தவன். (யாவையும் யாவருமாய் நின்ற மாயன்) சிலரோடு கலக்கும்போது அவர்கள் தாங்களாய்க் கலக்குமவன். சேதநாசேதங்களுக்கு ஆத்மாவாய் நின்றவன். “ததநுப்ரவிச்ய ஸச்ச த்யச்சாபவத்”. ஸம்ச்லேஷ தசையில் “ஏக வஸ்து” என்னலாம்படி கலக்கவல்லவன். (மாயன்) அவர்களாய்க் கலவாநிற்கச்செய்தே, தனக்கு அங்கொரு தொற்றற்றுப் போருமவன்; ஸர்வாந்தர்யாமி யாயிருக்கச் செய்தே, “அநச்நந்நந்யோ அபிசாகசீதி” என்று, இவற்றின் தோஷம் தன் பக்கல் தட்டாதபடியிருக்கை. ஜகதாகாரனாய்க் கொண்டு இவர்களோடு பிரித்து ப்ரதிபத்தி பண்ணவொண்ணாதபடி நிற்கச்செய்தே, அசித்தினுடைய பரிணாமமாதல், சித்தினுடைய ஸுகித்வ துக்கித்வங்களாதல் தட்டாதபடி நிற்கை. என்னோடே பரிமாறுமாபோலேகிடீர் எல்லாரோடும் கலந்து நின்றே ஒட்டற்று இருக்கும்படி என்கைக்காக “யாவையும் யாவருமாய் நின்ற மாயன்” என்கிறாள்; இல்லையாகில் இப்போது இது தேட்டமன்றே இப்ப்ரகரணத்துக்கு. “அழுக்குப் பதித்த வுடம்பி”ற்காட்டில் பரஞ்சுடருடம்புக்கு உண்டான வாசி சொல்லுகிறது. (என்னாழிப்பிரான்) தன்னுடைய அஸாதாரணமான விக்ரஹத்தை எனக்காக்கினவன். “யாவையும் யாவருமாய் நின்றமாய”னென்று ஜகதாகாரதையைச் சொல்லி வைத்து, “என்னாழிப் பிரான்” என்கிறாரிறே: அஸாதாரணமான வடிவுக்குத் தாம் ஈடுபட்டப்படி. “நீராய் நிலனாய்” என்று வைத்து, “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய்” என்றாரிறே. அவனுக்குப் புறம்பாயிருப்ப தொன்றில்லை என்றநுஸந்திக்கைக்காக, ஜகச்சரீரன் என்னுங்காட்டில், அத்தோபாதியிது உத்தேச்யமாமோ? “பரஞ்சுடருடம்பாய்” என்றும், “அழுக்குப் பதித்த வுடம்பாய்” என்றும் ஒன்றை ஹேய ப்ரத்யநீகமாகவும், ஒன்றை ஹேய மிச்ரமாகவும் சொல்லிற்றிறே. (மாவையித்யாதி) இவ்வடிவழகை புஜிப்பிக்கைக்கு விரோதி நிரஸநம் பண்ணுகை இவனுக்குக் காதாசித்கமன்றுகிடீர். (மதுசூதற்கு) புழுக்குறித்தது எழுத்தாமா போலன்றிக்கே விரோதி நிரோஸநம் நித்யமாயிருக்கை. (என் மாற்றஞ் சொல்லி) கன்மின்களென்று உங்களுக்குச் சொன்னத்தைச் சொல்லி. (பாவைகள் தீர்க்கிற்றிரே) பரமசேதநன் பொகட்டுப் போனான், சைதந்ய லவமுடைய இவை போகிறனவில்லை; இனி, நீங்கள் என் துக்கத்வத்தைப் போக்கவல்லிகோளோ? அப்ரதிஷேத மாத்ரத்தைக் கொண்டு இவற்றைக் காரியங்கொள்ளப் பார்க்கிறாள். (வினையாட்டியேன்) உங்களைக் கொண்டாடுகை தவிர்ந்து, கார்யங்கொள்ளும்படியான துக்கத்தை ப்ராப்தையானேன்; “மாசுச:” என்று சொன்னவன் விளைத்த சோகத்தை, அசேதநங்களைக் கொண்டு தீர்க்கவிருக்கிற மஹாபாபியானேன். பாசறவு - துக்கம்.
– (பூவைகள் போல் நிறத்தன்) - ஒரு ஆண்மகன், பெண் போன்று உள்ளதான விதத்தில் நிறம் கொண்டவன். ஆனால், ஒரு வடிவமானது ஆணைப் பெண்ணாக்குமோ என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; பாலகாண்டம் - பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் – ஆண்களின் மனத்தையும் கவரும் இராமன் - என்பதற்கு எற்ப ஆகும். தான் அடையவேண்டிய பேற்றின் பொருட்டு, பாவை ஒன்றின் கால்களில் விழும்படியான வடிவம் கொண்டவன். பூவை மலர் போன்ற வடிவம் கொண்டவன். (புண்டரீகங்கள் போலுங் கண்ணன்) – ஒரு மலரே மற்றொரு மலரைப் பூத்தது போன்று அவனுடைய திருமேனியும் திருக்கண்களும் உள்ளன. அதாவது ஒரு காயாம்பூவானது, தாமரை மலரைப் பூத்தது போன்றுள்ளது. சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் என்பதான வேறுபாடு ஏதும் இன்றி, அனைத்தும் தனது திருவடிகளில் விழும்படியான திருக்கண்கள் கொண்டவன். – (யாவையும் யாவருமாய் நின்ற மாயன்) - சிலரோடு கலக்கும்போது, அவர்கள் தாங்களாகவே இருக்கும்படியாகக் கலப்பவன். அனைத்து சேதந அசேதநங்களுக்கும் ஆத்மாவாக நிற்பவன்; இதற்கு ப்ரமாணம் தைத்திரீய ஆனந்தவல்லி – தத் அநுப்ரவிச்ய ஸத் ச த்யத் ச அபவத் – அவற்றில் புகுந்து சேதநமாகவும் அசேதநமாகவும் ஆனான் - என்பது காண்க. சேர்ந்துள்ளபோது, ஒரே ஒரு வஸ்து என்று கூறலாம்படியாகக் கலக்க வல்லவன். (மாயன்) - இவ்விதம் அனைத்துடன் கலந்து நிற்கும்போதிலும் அவற்றின் தோஷங்கள் தன்னைத் தீண்டாதபடி உள்ளவன். அதாவது அனைத்திற்கும் அந்தர்யாமியாக உள்ளபோதிலும், உபநிஷத்தில் - அநச்நந்நந்யோ அபிசாகசீதி - கர்ம பலனை அனுபவிக்காமல் உள்ளான் - என்பதற்கு ஏற்ப, அவற்றின் தோஷங்கள் தன்னிடம் அண்டாமல் இருத்தல். இந்த ஜகத்தின் உருவமாக உள்ளதாகவும், இவற்றிலிருந்து பிரித்து எண்ண இயலாதபடி உள்ளபோதிலும், அசித் பொருள்கள் போன்று ஒரு வரையறைக்குள் இருத்தல் மற்றும் சித் வஸ்த்துக்களின் ஸுகதுக்கங்கள் அண்டாதபடி இருத்தல் என்று உள்ளான். “என்னுடன் கலந்து நிற்பது போன்று, தான் அனைவருடன் கலந்து நின்று, ஒட்டாமல் உள்ளான்” என்பதை உணர்த்த “யாவையும் யாவருமாய் நின்ற மாயன்” என்கிறாள். இவ்விதம் இல்லையென்றால், இப்போது இந்த இடத்திற்கு இது அரிதாகிவிடும் அல்லவோ? அதாவது திருவாய்மொழி (6-3-7) – அழுக்குப் பதிந்த உடம்பு - என்னும் சரீரத்தைக் காட்டிலும் பரஞ்சுடரின் திருமேனிக்கு உள்ள வேறுபாடு கூறப்பட்டது. – (என் ஆழிப்பிரான்) - தனக்கு உரித்தான தனது திருமேனியை எனக்கு என்று ஆக்கியவன். ஆனால் “எனக்கு ஆக்கினவன்” என்று கூறுவதால் இவள் அவன் திருமேனியில் எப்போதும் ஈடுபட்டபடி இருப்பாளோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; “யாவையும் யாவருமாய் நின்ற மாயன்” என்று இந்த ஜகத்தையே தனது உருவமாகக் கொண்டு அவன் நிற்கும் நிலையைக் கூறிய பின்னர், “என் ஆழிப்பிரான்” என்றார்; அதாவது அவனுக்கே உரிய திருமேனியில் ஈடுபட்டபடி உள்ளதால் அல்லவோ இவ்விதம் கூறினார்? இந்த ஜகத்தையே தனது திருமேனியாகக் கொண்டுள்ள நிலையைக் காட்டிலும், அவனுக்கு உரிய திருமேனியை அனுபவிப்பதே தகுந்தது என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; திருவாய்மொழி (6-9-1) - நீராய் நிலனாய் - என்று கூறியபோதிலும் தொடர்ந்து, திருவாய்மொழி (6-9-1) – கூரார் ஆழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய் - என்று கூறினார். ஆனால், இந்த ஜகத்தையே தனது உருவமாகக் கொண்டுள்ள தன்மை என்பது அடையவேண்டிய இலக்கு இல்லையோ என்பதற்கு விடை அளிக்கிறார்; “அவனை விடுத்து வேறு ஏதும் இல்லை” என்று உரைப்பதற்காக, இந்த ஜகத்தையே தனது சரீரமாகக் கொண்டவன் என்று கூறப்பட்டது; ஆகவே, அவனுக்கு உரிய திருமேனியைக் காட்டிலும் இதற்கு ஏற்றமோ? திருவாய்மொழி (6-3-7) - பரஞ்சுடருடம்பாய் – என்றும், திருவாய்மொழி (6-3-7) – அழுக்குப் பதிந்த உடம்பு – என்றும், ஒன்றைத் தோஷங்கள் அனைத்திற்கும் எதிர்த்தட்டாகவும், ஒன்றைத் தோஷங்களுடன் கலந்துள்ளதகவும் கூறினார் அல்லவோ? – (மாவையித்யாதி) - இத்தகைய வடிவழகை அனுபவிக்கும்படிச் செய்வதற்குத் தடையாக உள்ள விரோதிகளை அழித்தல் என்பது இவனுக்கு எப்போதும் உள்ளது. (மதுசூதற்கு) – ஒரு புழுவால் மண் மீது இடப்பட்ட கோடுகளானவை, எழுத்து போன்று தற்காலிகமாகத் தென்படுவது போன்று அல்லாமல், இவன் விரோதிகளை அழித்தலானது எப்போதும் உள்ளது. (என் மாற்றஞ் சொல்லி) – “கன்மின்கள்” என்று உங்களுக்கு உரைத்தவற்றை அவனிடம் நீங்கள் கூறி. (பாவைகள் தீர்க்கிற்றிரே) - ஸர்வேச்வரனும் பறவையும் உள்ளபோது, பாவைகளை நோக்கி ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார். அனைத்து சேதநங்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்னை விட்டுச் சென்றான். சிறிதேனும் அறிவு கொண்ட இந்தப் பறவைகளும் எனக்காக அவனிடம் தூது செல்லவில்லை; ஆகவே பாவைகளாகிய நீங்கள் எனது துக்கத்தை விலக்கவல்லீர்களோ? ஆனால், அறிவற்ற பொருள்களை நோக்கி இவ்விதம் கூறினால், அவை இவளுடைய கார்யத்தைச் செய்யுமோ என்பதற்கு விடை கூறுகிறார். இவை தன்னை விலக்காது என்ற ஒரு தன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு, இவை மூலம் தனது கார்யம் செய்து கொள்ள முயல்கிறாள். (வினையாட்டியேன்) - உங்களை நான் கொண்டாடுவதை விடுத்து, உங்கள் மூலமாக எனது செயலை நிறைவேற்றிக் கொள்ளும்படியான துக்கத்தை நான் அடைந்துள்ளேன். அல்லது, கீதை (18-66) - மாசுச: - வருந்தாதே - என்று கூறியவன் உண்டாக்கிய துக்கத்தை, அசேதந வஸ்து கொண்டு தீர்க்கும்படியான பெரிய பாபம் செய்துள்ளேன்.